[தமிழமுதம்] இது ஒரு காதல் கதை
அந்தப் பயணம் மிகச்சிறப்பாக அமைந்தது. நன்றாக சுற்றிப்பார்க்க முடியவில்லை, ஆனாலும் புதிய மனிதர்கள், புதிய இடம், உறைய வைக்கும் குளிர் என அற்புதமாக இருந்தது. பயணம் முழுக்க உன் நினைவு தான். அந்தக் குளிரில் நீ இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். என்னடா மனைவி இல்லாதா சோகமா என்று நண்பர்களின் கிண்டல் வேறு. திருமணமான இந்த 5 மாதத்தில் நீ இல்லாமல் நடக்கும் முதல் வெளியூர் பயணம் இது. அலுவலகம் சார்ந்த பயணம் என்பதால் தனியே தொடங்கிற்று அந்த ரயில் பயணம்
பயணம் தொடங்கிய நிமிடத்திலிருந்து சந்தித்த மனிதர்கள், சன்னலோரப் பயணம், வயல்வெளிகள், பள்ளத்தாக்குகள், முகம் மட்டும் கருப்பாய் இருக்கும் குரங்கு என உனக்குச் சொல்ல நிறைய விஷயங்கள் இருந்தன. அலைபேசியில் கவிதையாய் விரிந்தன சில விஷயங்கள், உனக்குச் சொல்ல விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாய் சேகரித்து ஒரு ஓவியம் வரைந்து கொண்டிருந்தேன் மனதில்.
பயணம் முடிந்து அந்த ஒரு வாரம் முழுக்க பணியில் கழிந்தது காலைப் பொழுது, மாலைப் பொழுதுகள் நண்பர்கள் தண்ணி அடிக்க நான் வேடிக்கை பார்க்க, சைட் டிஷ் சாப்பிடுவதோடு முடிந்தது, இரவுகள் உன் நினைப்பில் சுமையாக கழிந்தன. நெட்வொர்க் பிரச்சனை கொடுத்த இம்சை உன்னிடம் சரியாக பேசக்கூட முடியவில்லை. குறுஞ்செய்தியில் பொங்கி வழிந்தது நம் காதல்.
வேலை முடிந்து மீண்டும் தொடங்கிற்று பயணம், உன்னைச் சந்திக்கப்போகும் சந்தோஷத்தில் மகிழ்ச்சியாய் ரயில் ஏறினேன். உனக்கு என் பயணத்தை எப்படி விளக்குவது என்று யோசித்து யோசித்து அற்புதமாய் உருவாக்கி வைத்திருந்தேன் கதைகளை. இன்னும் ஒரு நாள் பயணம் பாக்கி இருந்தது. கனவைக் கொஞ்சம் கலைத்தது குறுஞ்செய்தி. நீ தான் அனுப்பி இருந்தாய்,
"இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் வரதுக்கு"...
ஹா ஹா ஹா... சிரித்துக் கொண்டேன். "நேரம் இல்லை என் அன்பு பொண்டாட்டி, முழுதாக 1 நாள் 4 மணிநேரங்கள் இருக்கிறது" என்று பதில் அனுப்பினேன்.
ஹீம்ம்ம்... சலித்துக் கொண்டாய். உன் சலிப்பு எனக்கு நம் ஹனிமூன் நினைவுகளைத் தூண்டிவிட்டது. செல்லமாய்க் கோபித்து, சலிப்பாய் நீ சொல்லும் அந்த ஹிம்ம்ம் என்னை எப்போதும் இம்சிக்கும்.
'சீக்கிரம் வா புருஷா' என்று அனுப்பி இருந்தாய். சிரித்துக் கொண்டேன், என்ன பதில் அனுப்புவது என்று தெரியவில்லை. நானும் நீ இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தேன்.
'வந்துக்கிட்டே இருக்கேன்'னு பதில் அனுப்பினேன்.
அப்புறம் காதல் பேசி, காமம் பேசி, கொஞ்சி, முத்தங்களோடு கழிந்தது பொழுது. எழுந்து தனியே செல்லும் போதெல்லாம் "ஹே" என்று சத்தம் எழுப்பினர் நண்பர்கள். அவர்களுக்குத் தெரியும் உனக்கு முத்தம் கொடுக்கத்தான் தனியாகச் செல்கிறேன் என்று. சிரித்துக் கொண்டேன்.
உனக்கு குட்நைட் சொல்லிட்டு தூங்கப்போனேன். மறுபடியும் குறுஞ்செய்தி தொடர்ந்தது. எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. விடிந்ததும் பார்த்தால் உன்னுடமிருந்து 3 குறுஞ்செய்திகள்.
'தூங்கிட்டியா ஸ்டுப்பிட், உனக்கு என் மேல் காதலே இல்லை. ஐ ஹேட் யூ" என்று இருந்தது கடைசியாய் வந்திருந்த குறுஞ்செய்தி
சிரித்துக்கொண்டே 'தாங்க்யூ அண்ட் ஐ லைவ் யூ ஸ்டுப்பிட், குட்மார்னிங்' என்று அனுப்பினேன்.
ஊரை நெருங்கிக் கொண்டிருந்தேன். இன்னும் மூன்று மணி நேரங்கள் என்றார் அருகிலிருந்த நண்பர். உன்னை அலைப்பேசியில் அழைத்துச் சொன்னேன். 'மூன்று மணி நேரம் தான் இருக்கு' என்று. நீ "மூன்று மணி நேரமா" என்று அலுத்துக் கொண்டாய்.
ஊர் வந்தது, ஓடோடி வந்து கால்டாக்ஸி அழைத்து மச்சி நான் கிளம்புறேன், போன்ல பேசுறேன் என்றேன்.
'கிளம்பு கிளம்பு, நான் சொன்னதா தான் இருக்கும்' என்றான் நண்பன், மறுபடியும் அவர்களிடமிருந்து 'ஹே' என்று சத்தம்
நிமிடங்கள் என்னைக் கொல்லத்தொடங்கின. 'எப்போ வருவ", எனத் தொடர்ச்சியாய் என்னை இம்சித்துக் கொண்டிருந்தன உன்னுடைய குறுஞ்செய்திகள். பாலம் தாண்டிட்டேன், இந்தக் கல்லூரி தாண்டிட்டேன் என்று உனக்கு வரிசையாய் லைவ் கமெண்டரி அனுப்பிக் கொண்டிருந்தேன்.
சீக்கிரம் வா, சீக்கிரம் வா என கொஞ்சலாய் கெஞ்சிக்கொண்டிருந்தாய் நீ...
வீட்டிற்குள் நுழைந்த்தும் ஓடி வந்து அணைக்க வந்தேன். உன்னிடம் சொல்ல சேமித்திருந்த கதைகள் எல்லாம் மறந்து போயின. ஓடி வந்தவனை ஒற்றை விரல் காட்டி நிறுத்தினாய்...
'என்ன நல்லா ஊர் சுத்தினியா? பொண்டாட்டி இல்லாம நிம்மதியா இருந்திருப்பியே' என்றாய்.
அடிங்க என்று இறுக்கி அணைத்து, முத்தங்களால் உன்னை நிரப்பி, படுக்கையில் தள்ளின போது, என் மார்பில் சாய்ந்து கொண்டு கேட்டாய்.
'சீக்கிரம் வாடான்னு வர முடியாதா? எவ்ளோ நாள் தான் பொறுமையா இருக்குறது யார்க்கிட்டேயும் சொல்லாம' என்றாய்
சீக்கிரம் வான்னா எப்படி வரது? பறந்தா வரமுடியும். அப்படி என்ன தலை போற விஷயம்? புரிந்த மாதிரியும் இருந்தது, புரியாத மாதிரியும் இருந்தது.
உனக்கு வேணாம்னா நான் சொல்ல்ல என்றாய்...
சொல்லுடி என்ன விஷயம் என்றேன்...
ஹிம்ம்ம் என்றாய்... அதே சலிப்பு...
'இப்படி சலிச்சுக்காத, அது ரொம்ப ரொமாண்ட்டிக்கா இருக்கு'
'ம்ம்ம் இருக்கும் இருக்கும்' என்றாய்
மார்பில் சார்ந்து ரகசியம் சொன்னாய். சந்தோஷம் பொங்கியது... உன்னை தூக்கி சுற்றிவிட்டு கீழே இறக்கினேன்.
விடுடா ஸ்டுப்பிட் என்று திட்டினாய்.
ஒரு நிமிஷம் என்று ஓடிப்போய் அலைபேசி எடுத்து, நண்பனை அழைத்தேன். 'மச்சான், என் மனைவி கன்சீவ் ஆகி இருக்கா'ன்னு சொன்னேன்.
'வாழ்த்துகள் மச்சான், அதான் சொன்னோம்ல' என்றான்.
நம் காதல் நமக்கு அளித்த பொக்கிஷத்தைப் நினைத்து சந்தோஷம் பொங்க அள்ளி அணைத்து முத்தங்களால் நிரப்பினேன் உன்னை. தொடர்ந்தது நம் காதல் கதை.
--
நட்புடன்
மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/
சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி. சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment