Monday, January 25, 2010

[தமிழமுதம்] Re: [அன்புடன்] உடனடித்தேவை...

என்னோட வருத்தமும் இது தான் முகமுடி... இதைவிட அற்புதமா எழுதின ஒரு கட்டுரை இருக்க இதுக்கு போய் இரண்டாம் பரிசு கொடுத்துட்டாங்க



உடனடித் தேவை

 

 

தேவைகள் தான் இவ்வுலகை இயக்கிக் கொண்டிருக்கின்றன. தேவைகள் தான் புதிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. தேவைகள் தான் ஆட்சிகளை மாறச்செய்கின்றன. தேவைகள் தான் அகிம்சையா அல்லது ஆயுதமா என்பதை தீர்மானிக்கின்றன. தேவைகள் தான் அடிமையா விடுதலையா என்ற கேள்விகளுக்கு விடைகள் அழிக்கின்றன. இருப்பை விட தேவைகள் எல்லாக் காலங்களிலும் அதிகமாகத்தான் இருந்திருக்கின்றன.

 

ஒரு காலத்தில் நம் நாட்டில் சுதந்திரம் மிகப் பெரிய தேவையாக இருந்தது. அதைப் பெற்ற பிறகு சுதந்திரத்தின் பலன்களைத் தான் நாம் அதிகமாக அனுபவித்துக் கொண்டிருப்பதாக நான் கற்பிக்கப்பட்டு கொண்டிருக்கும் போதும் நமக்கு சுதந்திரம் தான் இன்னும் அதிகமாக தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது. மாற்றம் மட்டும் அல்ல தேவைகளும் மாறாதவை தான். காலத்திற்கு ஏற்ப தேவைகள் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கின்றன.

 

இன்று நமக்கு அதிகமாக தேவைப்படுவது எது. உடனடித் தேவை எது என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள மக்களின், நம் இனத்தின், மொழியின் தேவைகள் என்ன என்பதைப் பற்றி மக்களின் நிலைப்பாடு மாறுபடும். மக்களின் நிலைப்பாட்டிற்கும் ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டிற்கும் மாறுபாடு உண்டு. இன்று அடிப்படைத் தேவைகள், உடனடித்தேவைகளுக்கு முக்கியத்துவம் என்பது போய் சொகுசுத் தேவைகள் முக்கியத்துவம் பெறுகின்றன ஆட்சியாளர்கள் பார்வையில். நம் மக்களுக்கு, மொழிக்கு, இப்போதைய உடனைத்தேவைகள் என்னென்ன என்பது பற்றி பார்ப்போம்.

 

உணர்வு:

 

       என் பார்வையில் இப்போது நம் மக்களுக்கு, குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கு உடனடித் தேவை "உணர்வு". தமிழன் என்ற உணர்வு, தமிழ் என் மொழி. மொழி என்பது வெறும் தகவல் பரிமாறிக்கொள்ளும் ஊடகம் மட்டும் அல்ல அது நம் அடையாளம் என்பதன் உணர்வு. தமிழன் என்ற உணர்வற்று போய் இருப்பதால் தான் அருகிலே ஆயிரக்கணக்கில் உறவுகள் கொல்லப்பட்ட போது மௌனம் காத்தோம். மீனவர்கள் தினம் தினம் சுடப்படும் போது, கொல்லப்படும் போது, களவாடப்படும் போது உணர்வற்று பிணங்களாய்த் திரிகிறோம். ஆஸ்திரேலியாவில் தாக்கப்படுபவர்கள் இந்தியர்களாகவும் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுபவர்கள் தமிழ் மீனவர்களாகவும் வெளியுறவுத்துறை அமைச்சரால் விளிக்கப்படும் போதும் இந்தியன் என்று பெருமைப்பட்டுக்கொண்டு தமிழன் என்று சொல்ல யோசிக்கும் சுரணையற்ற தமிழர்களாய் வலம் வருகிறோம். அருகிலே உறவுகள் கொல்லப்பட்ட போதும் நமக்கு சோறு கிடைத்தால் போதும் என்று உயர்த்தப்பட்ட சம்பளத்தை நாய் எலும்புத்துண்டுகளைப் பொறுக்குவது போல் பொறுக்கிக் கொண்டு அமைதி காத்தோம். கண் இருந்தும் குருடர்களாய், காது இருந்தும் செவிடர்களாய் வாழப் பழகிக் கொண்டோம். பழக்கப் படுத்துகிறோம் நம் பிள்ளைகளையும்.

 

       ஆங்கிலக் கலப்பு அத்தியாவசிய இடங்களில் என்பது போய் அது ஒரு கலாச்சாரமாகவும் பெருமையாகவும் மாறிவிட்டது. இரண்டு மலையாளிகளோ அல்லது இரண்டு தெலுங்கர்களோ சந்தித்துக் கொண்டால் அவர்களின் பேச்சுமொழி அவர்களின் தாய் மொழியாகத்தான் இருக்கும் ஆனால், இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால் ஆங்கிலம் பேச்சு மொழியாக இருக்கிறது.

 

       இங்கே நீதிமன்றத்தில் கூட தமிழ் ஆட்சிமொழி இல்லை. பல்கலைக்கழகங்களில் இல்லை. பிள்ளைகளுக்கு வார்த்தைகளை சரியாக உச்சரிக்க சொல்லித் தருவது இல்லை. ஆங்கிலம் போதும், இந்தி தெரிந்து கொள்ளலாம். ஆனால் தமிழ் வேண்டாம். அடையாளம் துறந்து அனாதைகளாக அலைய நாம் சம்மதித்து விட்டோம். பொருள் தேட மொழி எதற்கு என்று பொருளை மையமாக வைத்து வாழ்க்கையைத் தொலைக்க நாம் தயார் படுத்திக் கொண்டிருக்கிறோம் நம் பிள்ளைகளை.

 

 

       எனக்கு தமிழ் படிக்கத் தெரியாது என்று பெருமையாக சொல்லும் ஒரு தலைமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். மொழி என்பது ஊடகம் அல்ல. அது அடையாளம். உலகில் உள்ள மக்கள் மொழிகளின் அடிப்படையில் தான் பிரிக்கப்படுகிறார்கள். மொழியின் தொன்மை அந்த இனத்தின் தொன்மை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சீரும் சிறப்புமாக இருந்த மொழி இன்று பிறமொழிக் கலப்பு மற்றும் புறக்கணிக்கப்படுதல் என்ற விஷயங்களினால் கலை இழந்து, பொழிவிழந்து வேகமாக அழிந்து வரும் மொழிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. முதலில் மொழியைப் பாதுகாப்போம், இனத்தைப் பாதுகாப்போம். இப்போதைய அடிப்படைத் தேவை, உடனடி தேவை உணர்வு.

 

      

 

 

கல்வி:

 

       உலகில் உள்ள நாடுகளில் எல்லாம் அடிப்படைக் கல்வி என்பது கட்டாயமாக்கப்பட்டு, எல்லோருக்கும் கல்வி என்ற நிலையை எட்டி ஆண்டுகள் பல கடந்த பிறகு. இப்போது தான் நம் நாட்டில் கல்வி என்பது அடிப்படை உரிமை என்று சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. சுதந்திரம் பெற்ற போதே செய்திருக்க வேண்டிய செயல் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் கழித்து நிறைவேறி இருக்கிறது. இது நடைமுறைக்கு வந்து செயல்பட ஆண்டுகள் பலவாகும்.

 

       அடிப்படைக் கல்வி முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணாக்கரின் எண்ணிக்கை 12% என்று ஓர் ஆய்வு சொல்கிறது. உயர்கல்வி இன்றும் ஏழை எளியவருக்கு எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது என்பது வேதனைக்குரிய விஷயம். கல்வியிலும் ஒரே தரத்தை நாம் கொண்டிருக்கிறோமா என்றால், இல்லை என்பதே வேதனைக்குரிய பதில். பாடமுறைகளிலும், உள்கட்டமைப்பு வசதிகளிலும் எண்ணிலடங்கா வேறுபாடுகளைக் கொண்டிருக்கிறோம். இங்கேயும் வசதி உள்ளவனுக்கும், இல்லாதவனுக்கு கொடுக்கப்படும் கல்வியில் வித்தியாசம் அதிகம். மாநில அரசு பாடமுறைக்கும், International Standard என்று சொல்லப்படும் சர்வதேசத் தரத்திற்கும் வித்தியாசம் அதிகம். இந்த சர்வதேச தரக் கல்விகள் இந்தியாவில் கிடைக்கும் ஆனால் அதற்கு கொடுக்கப்படும் விலை அதிகம்.  ஏழைப் பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் தரமான, சமமான கல்வி கிடைப்பது தான் இன்னொரு உடனடித் தேவை.

 

 

சுகாதாரம் மற்றும் குழந்தைகள் நலம்:

 

       தெற்காசியாவிலேயே ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியா தான் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் உள்ள 5 வயதிற்கும் குறைவான வயதுள்ள குழந்தைகளில்

 
48 % பேர் ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மற்ற தெற்காசிய நாடுகளை விட அதிகமாகும். தினமும் ஊட்டச்சத்து குறைவால் இந்தியாவில் 3000 குழந்தைகள் இறப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை சொல்கிறது
 
. நம் நாடு ராணுவத்திற்கு சென்ற 2008-2009 ஆண்டில் செலவிட்ட தொகை 26.5 பில்லியன் டாலர்கள்
 
. ஆனால் இந்தியா தன்னுடைய மொத்த GDP ல் சுகாதாரத்திற்கு செலவு செய்யும் சதவீதம் 0.9% மட்டுமே
 
.  நாம் இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது.
 நம்முடைய அடுத்த அத்தியாவசிய தேவை சுகாதாரமும் குழந்தைகள் நலமும்.








--
நட்புடன்

மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி.  சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment