Thursday, December 31, 2009

[அன்புடன்] கம்பனோடு நான் கலந்த பொழுதுகள் (8)

கம்பனோடு நான் கலந்த பொழுதுகள் (8)
========================================

கம்பன் என்னும் கவிராயன் தன் கவித்திறமையினால் ஆகிய காவியப்படலம் அவனைக்
கவிச்சக்கரவர்த்தி என்று உயர்த்திப் போற்றியது. ஒரு செயலை அவன் விளக்கும்
விதம், அதற்காக அவன் உபயோகிக்கும் ஒப்பீட்டு முறை அவனது ஆற்றலின் அளவை
நோக்கி எம்மை வியக்க வைக்கிறது..

தான் வாழ்ந்த காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் தான் விளக்க வந்த காவியத்தின்
பாத்திரங்களை விளக்கும் அவனது ஒப்பற்ற ஆற்றல் ஒப்பீடு இல்லாதது.

கம்பனின் படைப்புக்களில் அனைத்தையும் விஞ்சி நிற்பது கம்ப இராமாயணம்.
துரதிருஷ்டவசமாக இத்தகிய புராண இதிகாசங்களில் நம்பிக்கையற்றவர்கள்,
கம்பனின் ஆற்றலைச் சீர்தூக்கிப் பார்க்கும் இச்செய்கையை ஆத்திகத்தோடு
ஈடுபடுத்தி கலங்கிய கண்களோடு இவ்வாக்கத்தைப் பார்க்கலாம்.

இங்கே நான் ஆத்திகத்தோடு சம்பந்தப்பட்டவனா? இல்லையா? என்பதல்ல கேள்வி.
இது, என் மனதினிலே கம்பன் ஒரு சம்பவத்தை விளக்க உபயோகித்த அற்புத ஆற்றலை,
அவனது கவியாற்றலை வியக்கும் வகையில் தோன்றிய கருத்துக்களை நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்ளும் செயலே அன்றி வேறில்லை.

கம்பனின் இவ்விளக்கக் கவியின் பகுதியை முழுமையாக ரசிப்பதற்கு அதனுடன்
சம்மந்தப்பட்ட பின்னனியை சிறிது பார்ப்பது அவசியம்.

கெளசிகரின் வேண்டுகோளுக்கிணங்கி அவரின் நிஷ்டையைக் குழப்பும் தாடகையைக்
கொல்வதற்காக இராம, இலட்சுமணனை அழைத்துச் செல்ல வருகிறார் வசிஷ்டர்.

தவமிருந்து பெற்ற தன் குழந்தைகளை அனுப்பத் தந்தை தசரதன் தயங்குகிறான்.
தயக்கம் இருக்காதா என்ன? தயங்கா விட்டால் அவன் தந்தையாக இருக்க முடியுமா?

வசிஷ்டர் இராமன் தசரதனுக்கு பிள்ளையாக மைந்த காரணத்தை விளக்கி
மாகவிஷ்ணுவே அவருக்கு பிள்ளையாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும், சங்கு
சக்கரம் பரத, சத்துருக்கனணாகவும் அவதரித்ததைக் கூறுகிறார்.

மனமகிழ்ந்து போன தசரதன் முனிவரோடு அனுப்பி வைக்கிறான்.

தாடகையைக் கொலைசெய்யுமாறு முனிவர் பணித்ததும் திகைத்து விடுகிறான்
இராமன். என்ன ஒரு பெண்ணைக் கொலை செய்வதா ? முதல், முதலாக அம்பு, விலைக்
கையெலேந்துகிறேன், நான் ஒரு பெண்ணைக் கொலை செய்யலாமா ? கலங்கி
விடுகிறான்.

"ஆவி உண் என, வடிக்கணை
தொடுக்கிலன், உயிர்க்கே
துண்ணெனும் வினைத்தொழில்
தொடங்கியுளனேனும்,
பெண் என் மனத்திடை
பெருந்தகை நினைந்தான்" (கம்பராமாயணம்)

என்று கம்பன் மிக அழகாக இராமன் பெண்ணைக் கொலை செய்யத் துணியாத செயலை
அற்புதமாக விளக்கியுள்ளார்.

ஆனால் மிவரோ " இராமா, என்னைப் போன்ற முனிவர்களை காரமில்லாத சக்கை
என்றுதான் இவள் உண்ணாமல் விட்டு வைத்திருக்கிறாள்.. ஆகையால் இவளைப் பெண்
என்று எண்ணி நீ தயங்குவதை விடுத்து உடனே கொலை செய் " என்று
தைரியமூட்டுகிறார்.

இராமன் தாடகியைக் கொலைசெய்யும் அந்நிகழ்வை அழகுற கவிராயர் பின்வருமாறு
கூறுகிறார் பாருங்கள்.


"சொல் ஒக்கும் கடிய வேகச்
சுடு சரம்,கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல்
விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது
அப்புறம் சுழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன
பொருள் என, போயிற்று அன்றே !

ஒரு இளைய ஏறு போன்ற இளைஞன் உணர்ச்சி வேகத்தால் உந்தப்பட்டு ஒரு
பெரியவரைப் பார்த்து கடுஞ் சொற்கள் சொல்லிவிடுகிறான் என்று வைத்துக்
கொள்ளுங்கள். "என்னப்பா, தம்பி உன்னை விட வயதில் முதிர்ந்த அந்தப்
பெரியவரைப் பார்த்து என்ன வார்த்தை கூறி விட்டாய்?" என்று கேட்டால்,
அதற்கு " ஜய்யய்யோ தெரியாமல் பேசிவிட்டேன், உணர்ச்சியலைகள் மோதியதால்
என்னையறியாமல் சொற்கள் என் வாயிலிருந்து புறப்பட்டு விட்டன, என்னால்
அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை " என்று அவ்விளைஞன் பதிலிறுக்கிறான்
என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இராமனுடைய வில்லிருந்து புறப்பட்ட அம்பு அத்தகைய வேகத்தில்
புறப்பட்டதாம்,
அதை "சொல் ஒக்கும் கடிய வேகச் " என்று சொல்கிறான் எம் கவிச்சக்கரவர்த்தி.

கரிய செம்மலான இராமபிரான், காரிய இருட்டு இரவின் கருமையை ஒத்த தாடகையின்
மீது தனது அம்ப்பைச் செலுத்துகின்றார்.

அது தாடகியின் மார்ப்பைத் துளைத்து பின்புரம் வழியாகச் செல்கிறதாம்.
அதற்கு அவர் கூறும் ஒப்பனையைப் பாருங்கள்,

நன்றாகப் படித்துக் கல்வியறிவு பெற்ற ஒருவன், ஒரு நிலையில்லாத அறிவற்றவனை
அழைத்து , நீ கல்வி கற்று ஒழுங்காக இரு என்று கூறுவது எவ்வாறு அவன்
மனதில் தங்காது ஒரு செவியினூடு சென்று மறு செவியினூடாக விரைந்து
வெளியேறுகிறதொ அப்படி அவ் அம்பு தாடகையின் முன்புறத்தில் துளைத்து
பின்புறமாகச் சென்றதாம்.

கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது
அப்புறம் சுழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன
பொருள் என, போயிற்று அன்றே !

அப்பப்பா ! கவிச்சகரவர்த்தியின் கற்பனை எந்த அள்விர்குச் சாதாரண மனிதனின்
வாழோடு ஒத்து எளிய விளக்கமாய் அமைந்து விட்டது பார்த்தீர்களா?

சக்தி சக்திதாசன்
31.12.2009

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment