Tuesday, December 29, 2009

[அன்புடன்] நாடாளுமன்றமும் நடராஜர் கோவிலும்

* நாடாளுமன்றமும் ஒரு
நடராஜர் கோவில்தான்!

இங்கே
தில்லைவாழ் அந்தணர்கள்!

அங்கே
தில்லிவாழ் அந்தணர்கள்!

* இங்கேயும்
புராணம் உண்டு!

அங்கேயும்
புராணம் உண்டு!

இங்கே
பெரிய புராணம்!

அங்கே
ராஜிவ் புராணம்!

* இங்கே
நந்தனாரின்
எலும்புக்கூடு!

அங்கே
ஈழத்தின்
பிணவாடை!

* இங்கேயும்
நடுத்தெருவில்

அங்கேயும்
நடுத்தெருவில்

தமிழ்!

இங்கே
பாட அனுமதி இல்லை!

அங்கே
பேச அனுமதி இல்லை!

* இங்கே
அர்ச்சனை செய்தால்
ஆண்டவனை
அடையலாம் என்றும்

அங்கே
அர்ச்சனை செய்தால்
அரியணையை
அடையலாம் என்றும்

காலம் காலமாய் ஒரு
கணக்கு!

அதனால்தானோ என்னவோ

நாத்திகம் கூட
ராத்திரியில் போட்டுக்கொள்கிறது
நாமம்!

* அங்கே
''சட்டத்தின் முன்னால்
அனைவரும் சமம்''

அதனால்தான் அவர்கள்
சட்டத்தின் பின்னால் வைத்து
எல்லாவற்றையும்
முடித்துவிடுகிறார்கள்!

இங்கே
''ஆண்டவனின் பின்னால்
அனைவரும் சமம்''

அதனால்தான் இவர்கள்
ஆண்டவனின் முன்னால் வைத்தே
எல்லாவற்றையும்
தொடங்கிவிடுகிறார்கள்!

* இங்கேயும்
காணிக்கை உண்டு

அங்கேயும்
காணிக்கை உண்டு

இங்கே
சில்லறையாக!

அங்கே
கட்டுக் கட்டாக!

* ஒரேவொரு வித்தியாசம்...

எப்போதாவது இங்கே
பூட்டை உடைத்து நுழைந்து
திருடு போய்விட்டதாகச்
செய்தி வெளிவரும்!

அங்கே
அப்படி எதுவும்
வெளிவராது!

ஏனெனில்...

உடைப்பதற்குப் பூட்டு இருந்தும்
நுழைவதற்குத்...

திருடர்கள் யாரும்
வெளியே இல்லை!

0 comments:

  • Post a Comment