Thursday, December 31, 2009

[அன்புடன்] Re: நூலின் பெயர் : ஐக்கூ அருவிகள்,நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

திருக்குறள் அறத்துப்பால் வெண்பா பாங்கில் கவிதை விளக்கம் , நூல்
விமர்சனம்: கவிஞர் இரா.ரவி


நூல் ஆசிரியர்:கவிஞர் மதுரை பாபாராஜ்
ஆப்பிள் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள இந்த நூலின் அட்டைப்படத்தை
கம்பீரமாக அலங்கரிக்கின்றார் திருவள்ளுவர்.திருக்குறளை மொழி பெயர்க்காத
மொழி இல்லை,திருக்குறளை மொழி பெயர்க்காத மொழி மொழியே இல்லை. உலக பொது
மொழிகள் அனைத்திலும் பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். உலகப் பொதுமறையாம்
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மைய அரசுக்கு இன்னும் மனம் வரவில்லை
என்பது வேதனை.

திருக்குறளுக்கு பரிமேலழகர் தொடங்கி,பல்வேறு அறிஞர்கள் உரை எழுதி
இருக்கிறார்கள்.ஒவ்வொரு உரையும் ஒவ்வொரு சுவையாக இருக்கும். படிக்கப்
படிக்க திகட்டாத ஒப்பில்லா இலக்கியம் திருக்குறள்.ஓய்வின்றி உழைத்துக்
கொண்டே இருக்கும் மதுரை கவிஞர் பாபராஜ் மிகச்சிறந்த மரபுக்
கவிஞர்.கவிதைகளுக்காக பல்வேறு பரிசும்,பாராட்டும்,விருதும்
பெற்றவர்.வித்தியாசமாக சிந்திப்பவர்.எல்லோரையும் போல் உரை எழுதினால்
பத்தோடு ஒன்று,பதினொன்றாகப் போய் விடும் என்று கருதி,திருக்குறளை
புதுமையாக வெண்பா பாங்கில் தந்து தனித்த முத்திரை பதித்துள்ளார்.

திருவள்ளுவர் ஒன்றே முக்கால் அடிகளில் வழங்கிய அறத்துப்பால் நான்கு
வரிகளில் நச்சென்று எழுதி உள்ளார்.நூலிற்கான அணிந்துரையிலேயே நகைச்சுவை
முத்திரை பதிக்கிறார் மறைந்த மாமேதை தென்கச்சி கோ.சுவாமிநாதன்.

என்க்கெல்லாம் அறுபது வயது ஆனவுடன் இனிமேல் சும்மா இருக்கலாம் என்றுதான்
தோன்றியது என்னுடைய நண்பர் மதுரை பாபாராஜ் அவர்களுக்கோ அறுபது வயது
ஆனவுடன் இனிமேல் சும்மா இருக்கக்கூடாது என்று தோன்றியிருக்கிறது.

ஆறுபதிலும் ஆசை வரும்,கவிஞர் பாபாராஜ் அவர்களுக்கு,திருக்குறளை வெண்பா
வடிவில் வடிக்க ஆசைப்பட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். எல்லோருக்கும்
வாய்ப்பதில்லை இந்தத் திறமை,மரபுக் கவிஞர் என்பதால் மொழிப் புலமை
இருந்ததால் திருக்குறள் உரைகள் பலவற்றை ஊன்றி படித்து உள் வாங்கிய
காரணத்தால் வடிக்க முடிந்தது. நூலைப் படிக்கும் போது நூலாசிரியரின்
உழைப்பை உணர முடிகின்றது.சிற்ப்பியின் நுட்பத்துடன்,கல்லில் தேவையற்ற
பகுதி நீக்கும் போது சிற்பமாகின்றது.வெண்பாவில் தேவையற்ற சொல்
எதுவுமின்றி சொற் சிக்கனத்துடன் வெண்பா விருந்து வைத்துள்ளார்.

வெண்பா எழுத வராது என்று சொல்லும் புதுக்கவிஞர்கள் கூட இந்நூலை படித்து
முடித்தால்,வெண்பா எழுதிட கற்றுக் கொள்வார்கள்.வெண்பா பற்றி புரிதலையும்
திருக்குறளின் கருத்து ஆழத்தையும் உணர்த்திடும் நூல்.திருக்குறள்
புரியவில்லை,சொற்கள் கடினமாக உள்ளது என்று சொல்லும் இன்றைய இளைய
தலைமுறையினர் அவசியம் இந்த நூலைப் படிக்க வேண்டும்.படித்தால் திருக்குறள்
எளிதில்; நன்கு விளங்கும்.

இந்நூலில் 380 திருக்குறளுக்கு வெண்பா வடிவில் வடித்துள்ளார்.பதச்சோறாக
சில மட்டும் தங்கள் பார்வைக்கு இதோ!

34.மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகல நீர பிற

மனத்திலேயே மாசற்று வாழ்தல் அறமாம்!
மனத்தூய்மை இன்றி நடித்துத் - தினந்தினம்
நற்செயல்கள் செய்தால் அவைகள் பகட்டென்னும்
அற்பத்தின் ஊடகந்தான் சாற்று.

திருவள்ளுவரின் அறத்துப்பால் முழமையும் பறைசாற்றும் விதமாக இந்த ஒரு
திருக்குறள் வெண்பாவே போதும்.

45.அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

உள்ளத்தில் ஊறுகின்ற உண்மையான உள்ளன்பே
இல்லறத்தின் மேன்மையான பண்பாகும்-இல்லறத்தில்
முற்றிக் கதிராடும் நற்பயனே நல்லறமாம்!
பற்றிப் படர்ந்தால் நலம்.

திருவள்ளுவர் திருக்குறளை எழுதும் போது கூட இவ்வளவு பொருள் உள்ளதா என
அறிந்து இருக்க மாட்டார்.திருவள்ளுவர் எண்ணியதை விட கூடுதலாக பொருள்படும்
விதத்தில் விளக்கமாக,அதே நேரத்தில் வேற்று மொழிச் சொற்கள் எதுவுமின்றி
எளிய தமிழ்மொழிச் சொற்களை மட்டுமே பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்
நூலாசிரியர்.

34.கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும தொழும்

எந்த உயிரையும் இவ்வுலகில் கொல்லாமல்
இங்கே இறைச்சியைப் பாவமென-தின்ன
மறுத்தேதான் வாழ்பவனை மற்ற உயிர் எல்லாம்
நிறைந்து வணங்கும் நினைந்து

இந்தத் திருக்குறளை குறித்து வெண்பா படித்து முடிந்ததும் என்னுள்
தோன்றியது.திருவள்ளுவர் விலங்காபி மானத்தோடு வடித்தார்.மனிதாபிமானமின்றி
தமிழ் இனத்தை பூண்டோடு அழித்த கொடியவன் இராஜபக்சே-வை இந்த உலகமே
பழிக்கும்.மொத்தத்தில் உலகப் பொதுமறை திருக்குறள் தமிழில் உள்ளதற்காக
உலகில் உள்ள ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும்,நான் பிறந்த மண்ணில்
பிறந்த மதுரையில் பிறந்த பாபாராஜ் திருக்குறள் வெண்பா வடித்ததற்காக மதுரை
பெருமை கொள்கின்றது.
www.kavimalar.com

On 12/31/09, eraeravik <eraeravik@gmail.com> wrote:
> நூலின் பெயர் : ஐக்கூ அருவிகள்,நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
>
>
> நூல் ஆசிரியர் : கவிஞர் அமுதபாரதி
> ஐக்கூ அருவிகள் நூலின் பெயருக்கேற்றபடி ஹைக்கூ கவிதைகளின் அருவியாக நூல்
> உள்ளது. குற்றால அருவியில் குளித்து முடித்த இன்பம் கிடைக்கின்றது. 100
> ஹைக்கூ கவிதைகள் உள்ளது. 100-ம் 100- சிந்தனை விதைக்கின்றது.தமிழக அரசின்
> பரிசு பெற்ற நூல்.
>
> கவிஞர் அமுதபாரதி ஹைக்கூ கவிஞர்களின் முன்னோடி. இன்றைக்கு பரவலாக ஹைக்கூ
> எல்லோராலும் விரும்பப்படுகின்றது. பலரால் எழுதப்படுகின்றது. 1998-ஆம்
> ஆண்டிலேயே ஹைக்கூ முதற்பதிப்பு வெளியிட்ட கவிஞர். படித்த பொறியாளர் முதல்
> சாதாரண தொழிலாளி வரை பலரும் ஹைக்கூ எழுதி வருகின்றனர். கவிஞர்
> அழுதபாரதியின் ஹைக்கூ கவிதைகள் பல இலக்கிய மேடைகளில் மேற்கோள்
> காட்டப்பட்டவை. இலக்கிய ஆர்வலர்களை ஈர்த்த ஹைக்கூக்கள்.
>
> நர்மதா பதிப்பகத்தின் தரமான பதிப்பாக நூல் வந்துள்ளது. ஐக்கூ அருவிகள்
> என்ற இந்த நூலை நண்பர்களுக்கு பரிசளிக்கலாம். நல்ல சிந்தனை விதைக்கும்
> நயம் மிக்க ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு நூல். முனைவர். மா. செல்வராசன்
> அவர்களின் அணிந்துரை முத்தாய்ப்பாக உள்ளது. முத்திரை பதிக்கின்றது.
> அணிந்துரையில் கவிதை வடிவிலும் உள்ளது கூடுதல் சிறப்பு.
>
> மனிதன் பக்கத்து வீட்டாருடன் அன்பாக இருப்பதில்லை, பழகுவதில்லை.
> ஒதுங்கியே வாழ்கிறான் என்பதை உணர்த்தும் ஹைக்கூ.
>
> ஒரே தெரு
> தனித்தனி தீவுகளாய்
> நடக்கும் மனிதர்கள்
>
> செல்வந்தர் வீடுகளில் தொட்டிக்குள் மீனை சிறைப்படுத்தி மகிழ்வார்கள்,
> இதனைப் பார்த்தால் மனதிற்கு இதமாகுமாம். ஆனால் சுதந்திரமாய் இருந்த
> மீனுக்கு மகிழ்ச்சி இல்லை.சிறை பிடிக்கப்பட்டதற்காக மீன்கள் வருந்தி
> சோகப்படுவதில்லை. வாழ்வை இழப்பதில்லை.
>
> தொட்டிக்குள்
> வாழ்ந்தாலும்
> நீந்தும் மீன்
>
> மயக்கம் அடைந்தவர்கள் முகத்தில் நீர் தெளித்து விழிக்க வைப்போம், இது
> நடைமுறை. ஆனால் கவிஞர் நீர் தெளித்ததும் இறந்ததாம், அது என்ன?
>
> நீர் தெளித்தேன்
> துடிதுடித்து இறக்கும்
> தீக்கங்கு
>
> நம் கண்முன்னே தீக்கங்கு, அதன் மீது நீர் தெளித்ததும் வரும் புகை இவற்றை
> காட்சிப்படுத்தி விடுகிறார். இது தான் படைப்பாளியின் வெற்றி. ஹைக்கூவின்
> வெற்றி.
>
> ஜப்பானிய ஹைக்கூவில் பெரும்பாலும் இயற்கையையே பாடுவார்கள். அதற்கு
> சளைத்தவன் அல்ல தமிழன் என்று நிரூபிக்கும் ஹைக்கூ.
>
> எச்சல் படுத்த வேண்டாம்
> அங்கேயே அசைந்தாடட்டும்
> வாழை இழை
>
> வாழை இலையே சாப்பிட வெட்டுகிறான். வீட்டில் விசேஷம் என்றால் வாழையையே வெட்டுகிறான்.
>
> மழை சூடாக இருக்குமா ? என்ற கேள்வியை எழுப்பி, எப்போது சூடாக இருக்கும்
> என்று விடையைச் சொல்லி காட்சிப்படுத்துகிறார் கவிஞர் அமுதபாரதி.
> பேருந்து நிறுத்தம்
> சூடாய் மழை
> பக்கத்தில் அவள்
>
> காதலுக்கு விழிகள் போதும், பேசும் இதழ்கள் வேண்டாம், பேசாமலே காதலிக்க
> முடியும் கண்களுக்கு அவ்வளவு சக்தி உண்டு என உணர்த்தும் ஹைக்கூ.
>
> பேசுவதில்லை
> அன்றாடம் காதலிக்கும்
> வண்ணத்துப் பூச்சிகள்
>
> கவிஞர்கள் இரவு விழித்து இருந்தாலும், கவலை இல்லை, கவிதை படைத்து
> விடுவார்கள். விழிகளின் இரவு விழிப்பு, கவிதைகளின் மலர்ச்சியாக அமையும்.
>
> இரவு விழிப்பு
> வீணாகவில்லை
> மூளைக்குள் ஐக்கூ
>
> படைப்பாளிக்கு மரணம் இல்லை, படைப்புகள் நிலைக்க படைப்பாளியின்
> நிலைப்பான். பூத உடல் அழியலாம். புகழ் உடல் அழிவதில்லை.அது போல
> படைப்பாளியின் ஆயுளை நீட்டிக்கும் ஆற்றல் படைப்புக்கும் உலகின் முதன்
> மொழியான தமிழக்கும் உண்டு. இலக்கிய ஈடுபாடு என்பது கவலைகளை மறக்க வைத்து
> புத்துணர்வு ஊட்டும்.
>
> கவிதைகள் எழுத எழுத
> என்னை ஒதுக்கிச் செல்லும்
> மரணம்.
>
> கவிஞர் அமுதபாரதியின் பெயரில் மகாகவி பாரதியின் பெயரும் இருப்பதால்
> அழகாகப் புனைந்து உள்ளார்.
>
> ஒலி பெருக்கி கிடைத்து விட்டது என்பதற்காக கேட்பவரின் மனநிலை அறியாது,
> பேசியதையே பேசி, கேட்பவர்களுக்கு எரிச்சல் ஏற்படுத்துவார்கள். கூறியது
> கூறல் குற்றம் மேடைப் பேச்சில், ஆனால் கவிஞர் குற்றமில்லை என்கிறார்
> யாருக்கு ?
>
> கூறியது கூறல்
> குற்றமல்ல
> கூவுக குயிலே !
>
> மூன்றாவது வரியில் ஒரு முத்தாய்ப்பு. எள்ளல் சுவையும் உள்ளது. குயிலின்
> கூவல் திகட்டுவது இல்லை, இனிமையாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றார்.
> குயிலுக்கு கவிஞர் சொன்னதை பேச்சாளர் தனக்கு சொன்னதாக எடுத்துக் கொள்ளக்
> கூடாது என்பதை மிகவும் முக்கியம்.
>
> முடி வெட்டும் கடைக்குச் சென்றால், வெட்டிக் கொண்டிருக்கும் போது
> வெட்டுபவர் நமக்கு ஆர்வமில்லாத, தொடர்பில்லா பல கருத்துக்களைச் சொன்ன
> போதும், வேறு வழியின்றி கேட்டுக் கொண்டிருப்போம். இந்த அனுபவம்
> பலருக்கும் உண்டு. அதனை விளக்கும் அழகிய ஹைக்கூ இதோ!
>
> முடி வெட்டும் கடை
> கத்தரிக்க முடியவில்லை
> வெட்டுபவரின் பேச்சு
>
> மீன் பிடிக்கும் போது தூண்டிலில் புழுவை வைப்பது வழக்கம். புழுவைத் தின்ன
> வந்த மீன் தூண்டிலில் மாட்டும். ஆனால் புழுவின் வலி மீன்கள் உணருவதில்லை.
> மீன்கள் மட்டுமல்ல பல மனிதர்களும், சக மனிதனின் வலியை உணருவதில்லை.
> ஈழத்தமிழர் வலியை நாம் உணரவில்லை.
>
> தூண்டிலில் சிக்கும்
> மீனுக்குத் தெரியுமா ?
> புழுவின் வலி.
>
> ஹைக்கூ எப்படி எழுத வேண்டும் என்பதை கற்பிக்கும் நூல். வளரும் கவிஞர்கள்
> அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய அற்புத நூல்.
>

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment