[அன்புடன்] சரித்திரத்தை அறிந்தால் சத்தமாய்ச் சொல்
சரித்திரத்தை அறிந்தால் சத்தமாய்ச் சொல்
=========================================
நீ நடக்கும்
செம்மண்ணின் நிறத்தின்
சரித்திரத்தை
அறிந்திருக்க மட்டாய்
குழந்தை நீ . . .
தத்தித் தத்தி நீ
தவழும் இம்மண்ணில்
எத்தனை உயிர்கள்
தம் செங்குருதியைக் கொட்டி
மண்ணைச் செம்மண்னாக்கினார்கள்
அறிய மாட்டாய் ஏனெனில்
மழலை நீ
சுவாசிக்கும் காற்றுக்கூட தமக்குச்
சொந்தமில்லை என்பதினால் தமது
சுவாசத்தை விலையாக கொடுத்துச்
சுவர்க்கத்துக்குச் சென்று விட்டவர்கள்
எத்தனை பேர் என்பதை
அறிய மாட்டாய் ஏனென்றால்
நீ இன்னும் அம்மண்ணில்
தவழும் குழந்தை
அன்னை ஈன்ற
அற்புத மண்ணில் வாழ
முடியாததினால்
தம் தாய்நாட்டை விட்டுப்
புலம்பெயர்ந்து தம் நினைவுகளைப்
புலம்பித் தீர்த்தவர்கள்
எத்த்னை பேர் அறிய மாட்டாய்
ஏனேனில் நீ நேற்றுப் பூத்த
சின்னரோஜா
தாய் தந்த மொழி பேசும்
குற்றம் ஒன்றேயன்றி வேறேதும்
அறியாத உனைப் போன்ற குழந்தைகள்
அரும்பாக அழிந்து போன
அழிவுக் காவியங்களை நீ
அறிந்திருக்க நியாயமில்லை
தவழ்ந்திடும்
தமிழ்த்தளிர் நீ
உன் கால்கள் இத்தரையூன்றி
இளங்காளைப் பருவத்தில்
இம்மண்ணின் மைந்தன் நான் என
இதயம் பூரிக்க நீ சொல்லும் வேளையில்
நானிருக்க மாட்டேன்
அப்போது சரித்திரம் உனக்குப்
புரிந்திருந்தால் சத்தமாய்ச் சொல்
காற்றோடு காற்றாக கலந்திருக்கும்
என் ஆத்மாவைத் தழுவி
அது எனக்குக் குளிர்மையூட்டும்
அன்புடன்
சக்தி
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment