[அன்புடன்] தமிழ் மூதறிஞர் இளங்குமரனார் உரை , தொகுப்பு : கவிஞர் இரா.இரவி
தமிழ் மூதறிஞர் இளங்குமரனார் உரை , தொகுப்பு : கவிஞர் இரா.இரவி
www.kavimalar.com
தலைப்பு : வள்ளுவர் வழியில் ஒப்புரிமை
இடம் : மணியம்மையார் மழலையர் தொடக்கப்பள்ளி
ஏற்பாடு : மானமிகு பி.வரதராசன் புரட்சிக் கவிஞர் மன்றம், மதுரை
உலகப் பொதுமறையான திருக்குறளில் மனித உரிமைகள் மிகத் தெளிவாக அன்றே
குறிப்பிடப்பட்டுள்ளது. 81 வயது அப்பர் அடிகள் மனிதனை மதித்தார். மனிதர்
நோக மனிதன் பார்க்கும் பார்வையை வெறுத்தார்.
தோல் என்பதற்கு உரி என்று ஒரு சொல் உண்டு. இதன் பொருள் தோல் உள்ள
அனைவருக்கும் உரிமை உண்டு. தலை குளித்தாயா ? மேலுக்கு மட்டும் குளித்தாயா
? என்பர். தோலுக்கு மேல் என்றும் பொருள் உண்டு. தோலில் கருப்பு, வெள்ளை
உயர்வு தாழ்வு இல்லை. எல்லாத் தோலும் மேலானதே என்பது அதன் பொருள். உலகில்
உள்ள எல்லா மொழிகளையும் விட உயர்தனிச் செம்மொழியாகும் தமிழுக்கு உள்ள
தனிச்சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு சொல்லுக்கும் காரணம் உண்டு. சொல்
எப்படி வந்தது. என 6000 பக்கத்தில் நூல் எழுதி வருகின்றேன். திரு.
சாம்பசிவ பிள்ளை மருத்துவ அகராதி நூல் வெளியிட்டார். தன் சொந்த வீட்டை
விற்று நூல் வெளியிட்டார். தன் சொந்த வீட்டை விற்று நூல் வெளீயிட்டு,
ஏழ்மையில் வாடி இறந்தார். அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. தமிழுக்குத்
தொண்டு செய்பவர்களை வாழும் காலத்திலேயே கண்டு கொண்டு அங்கீகரிக்க
வேண்டும்.
மாணிக்க வாசகர் கூட தன்னை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று
வருத்தப்பட்டுள்ளார். அரசு, மக்கள், உற்றார்-உறவினர், தமிழ் அறிஞர்களை
கண்டு கொள்ள வேண்டும், போற்ற வேண்டும், பாரட்ட வேண்டும்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கம் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
மக்கள் பிறப்பால் ஒத்தவர்களின், பெருமை, சிறுமை என்னும் அவர்களது
சிறப்பியல்புகள் அவர்கள் செய்யும் தொழில்களின் வேறுபாட்டால்
ஒத்திருப்பதில்லை. பிறப்பொக்கும் எல்லா மனிதர்கள் என்று கூட சொல்லவில்லை.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று அனைத்து ஜீவன்களையும்
குறிப்பிடுகிறார். அது தான் திருக்குறளின் தனிச்சிறப்பு. மனிதன்
குறிப்பாகத் தமிழன், மரத்தைக் கூட பிள்ளையைப் போல வளர்ப்பவன், அதனால்
தான் தென்னை மரத்தை தென்னம்பிள்ளை என்று அழைத்தான். பறவைகளை நேசிப்பவன்,
அதனால் தான் கிளிப்பிள்ளை என்று அழைத்தான். இப்படி மரத்தை, பறவையை
நேசித்தவன் மனிதனை வெறுக்கலாமா ? செய்யும் தொழில் காரணமாக உயர்ந்தவனும்
இல்லை, தாழ்ந்தவனும் இல்லை, மலம் அள்ளும் தொழிலாளியைத் தாழ்ந்தவன் என்பது
மடத்தனம். தாய்க்கு நிகரானவன், போற்றப்பட வேண்டியவன், திரு.வி.க.
சொல்வார்கள் துன்ப நீக்கம், இன்ப ஆக்கம் எல்லா உயிர்களுக்கும்
பொருந்தும்.
உயர் பதவியில் இருப்பவர்கள் உயர்ந்தவர்கள், தாழ்ந்த பதவியில்
இருப்பபவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற கருத்தும் தவறு. திருநகரில், மாவட்ட
அதிகாரியின் ஏவலாளி, அவரது பண்பு, ஒழுக்கம் காரணமாக மாவட்ட அதிகாரியை விட
உயர்ந்தவராக மதிக்கப்பட்டார். எனவே உயர்ந்த உள்ளம் படைத்தவர், தாழ்ந்த
பதவியில் இருந்தாலும் உயர்ந்தவரே. பதவி என்றால், சிலர் செருக்கோடு
வாழ்கின்றனர். பதவிக்கு விளக்கம் என்ன தெரியுமா ? ப – என்றால் பண்பாடு, த
– என்றால் தளராத முயற்சி, வி – என்றால் வினையாற்றல், உயர்பதவியில்
இருந்தாலும் பண்பாடு என்பது தலையாய பண்பாகும்.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்
தவம் செய்பவர்க்குத் தலைமையிரை மழித்தலும், வளர்த்தலுமாகிய வெளி வேடங்கள்
வேண்டாம் என்கிறார் திருவள்ளுவர். திருவள்ளுவர் காலத்தில் வேதியர்கள்
குடுமி வளர்த்தனர். சமணர்கள் முடி மழித்தனர், இதனைக் கண்டிக்கம் விதமாக
இக்குறள் பாடினார். தவம் என்பது தவ் என்றால் சுருக்கு என்று பொருள்.
தேவையை சுருக்கி சேவையை பெருக்குவது தான் தவம். அவரவர் கடமையை ஒழுங்காகச்
செய்தாலே போதும், அது தான் தவம். வெளித்தோற்றத்தில் எதுவுமில்லை
என்கிறார் திருவள்ளுவர்.
ஒரு இரும்பின் விலை இரண்டு ரூபாய், அந்த இரும்பை அரிவளாக மாற்றுகின்றான்
- இருபது ரூபாய், இன்னொருவன் அதே இரும்பை ஒலி வாங்கியாக மாற்றுகின்றான் -
இரண்டாயிரம் ரூபாய். எனவே, இரும்பின் விலை இரண்டு, மூளையின் விலை இருபது,
இரண்டாயிரம், வறுமை தான் உழைக்க வைக்கின்றது. செல்வத்திற்கும், பாவ
புண்ணியத்திற்கும் சம்பந்தம் இல்லை. செல்வந்தன் எல்லாம் புண்ணியவானும்
இல்லை. ஏழைகள் பாவம் செய்தவர்களும் இல்லை, கண்ணுக்கு அணிகலன் கண்ணோட்டம்.
இரக்கம் உள்ளவர்களே மனிதர்கள். இரக்கமற்றவர்கள் மனிதர்கள் அன்று. கண்
உடையோர் கற்றோர். சமச்சீர் கல்வி என்று பேசுகிறோம். அன்றே திருவள்ளுவர்
கண் உடைய அனைவருக்கும் கல்வி என்றார். இன்று தான் பெண் மகள் பிறந்தால்,
சிலர் கவலை கொள்கின்றனர். ஆனால் அன்று மலைவேடன் கூட எனக்கு பெண் மகள் தா
! என வேண்டுகிறான். பெண் கல்வி அன்றே சங்க காலத்தில் இருந்தது
என்பதற்குச் சான்று பெண்பாற்புலவர்கள். இலக்கணம் பாடிய காக்கைப்
பாடினியார், அவ்வையார் இப்படி பலர் பெண்களில் கற்றவர் இருந்தனர்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றலைத் தூறும் அறிவு
கேணியில் தோண்டிய அளவிற்கேற்ப நீர் ஊறும்,அதுபோல மக்களுக்கு அவர்கள் கற்ற
அளவிற்கேற்ப அறிவு பெருகும். கல்வியை மிகவும் உயர்வாகக்
குறிப்பிடுகின்றார் திருவள்ளுவர். கற்க முடியாவிட்டாலும் பரவாயில்லை.
கற்றவர் பேச்சைக் கேள், என்கிறார். பிராமணர்களுக்கு கொடுப்பது புண்ணியம்
என்று மனு சாஸ்திரம் சொல்கின்றது. ஆனால் திருவள்ளுர் வறியவர் யாராக
இருந்தாலும் கொடு என்கிறார்.
உழை என்றால் உன் பக்கம் என்று பொருள்,உழைத்தால் உன் பக்கம்
பொருள்,உழைத்தால் உன் பக்கம் பொருள் வந்து சேரும் என்பதை உணர்த்திட,"
உழை" என்ற சொல் வந்தது. தமிழில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் பொருளும்,
காரணமும் உண்டு. உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத தனிச்சிறப்பு
தமிழுக்கு மட்டுமே உண்டு.
இரும்பு கூட பயன்படுத்தாமல் இருந்தால் துரு பிடிக்கும். மனிதன்
உழைக்காமல் சோம்பலால் கெட்டுப் போவான். 80 வயதாகி விட்டது என
நினைக்காதீர்கள், என்பதில் உள்ள சுழியை நீக்கி விடுங்கள். 8 ஆகி விடும்.
எண்ணம் தான் வயது. என்னால் முடியும் என்றால் முடியும். தொல்காப்பியர்
அன்றே சொன்னார். ஓய்தல் முடிந்தால் ஆய்தல், எனவே ஓய்வு பெற்ற
பேராசிரியர்கள் அனைவரும் ஆய்வு செய்யுங்கள், ஆய்வுக்கான பொருள் நிறைய
உள்ளது.
அந்த பெண்ணிற்கு வெட்கம் இருக்கா? நாணம் இருக்கா? என்று கேட்டு
பெண்ணிற்கு மட்டுமே, வெட்கம்,நாணம்; வேண்டும்,ஆணிற்கு தேவை இல்லை என
முடிவு எடுத்து விடுகிறோம். இது தவறு ஆணிற்கும், வெட்கம், நாணம் அவசியம்
தேவை என்கிறார் திருவள்ளுவர். இருபாலருக்கும் பொது. அஞ்ச வேண்டிதற்கு
அஞ்ச வேண்டும் என்கிறார்.
அஞ்சுவ தஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
சமையல் என்ற சொல்லில் இருந்து வந்தது சமயம். அன்னை உண்ண முடியாதவற்றை
உண்ணும் வகையில் பக்குவப்படுத்துவதை சமையல் என்கிறோம். அது போல மனிதனை
பக்குவப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது சமயம்.ஆனால் இன்று சமயம்
சடங்காக மாறி விட்டது. நாமக்கல் கவிஞர் பாடினார். அல்லா என்பார்கள் சில
பேர், எவர்? ஏதனை? எப்படி தொழுதால் நமக்கென்ன? என்பார்: சமய சண்டைகள்
ஒழிந்து மனித நேயம் மலர வேண்டும், திருமூலர் சொன்னார், சமய சண்டை என்பது
மலையைப் பார்த்து நாய் குரைப்பதைப் போன்றது என்றார்.
திருவள்ளுவர் சொன்ன அளவிற்கு தத்துவங்கள் வேறு யாரும் சொன்னதில்லை,
என்னிடம் 150 மேல் சமய நூல்கள் உள்ளது. ஆனால் திருக்குறளுக்கு இணையாக ஒரு
சமய நூலையும் காண முடியவில்லை. ஈடு இணையற்ற நூல் திருக்குறள்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
பற்று உள்ளவரை எரியும் பற்று முடிந்ததும் எரிவது நின்று விடும். அதனால்
பற்று என்;றனர், அது நான் நாளடைவில் பத்தி என்று மாறியது. நம்மில் பலர்
உடலுக்கு ஓய்வு தருகின்றோம், ஆனால் குடலுக்கு ஓய்வு தருவதில்லை,
குடலுக்கான ஓய்வு ஆயுளை நீட்டும்.
யாதனின் யாதனின் ஓய்வு நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இவன்.
எவன் எவ்வெப் பொருளில் ஆசையை ஒழித்தானோ அவன் அவ்வப் பொருளால் துன்பம்
உண்டாவதில்லை. இக்கருத்தில் மிகப்பெரிய தத்துவம் அடங்கி உள்ளது. எனக்கு
வெண்ணெய் வேண்டாம் என்று விட்டு விட்டால், வெண்ணெயால் துன்பம் வராது, நம்
தேவையை குறைத்தால் சேவையைப் பெருக்கலாம்.
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மானம் பெரிது
இல்லற ஒழுக்கத்தில் மாறுபடாமல் நின்று அடங்கியிருப்பவனின் பெருமை, மலையை
விட மிகப் பெரியதாகும். ஆண்களுக்கு பெண்மை வேண்டும். பெண்மை என்றால்
அன்பு, அடக்கம், பொறுமை, பகைவரை மன்னிக்கும் உள்ளம் இவையாவும் ஆண்களுக்கு
வேண்டும்.
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல.
தனக்கு ஒப்பில்லாது உயர்ந்த புகழைத் தவிர இவ்வுலகத்தில் அழியாமல்
இருப்பது வேறொன்றில்லை. திருக்குறளைப் போன்று புகழ் வாய்ந்த நூல்
இவ்வுலகில் இல்லை. எனவே வள்ளுவர் வழியில் உயர்வோம், வளம் காண்போம்.
மூதறிஞர் இரா. இளங்குமரனார் உரை கேட்ட அனைவரும் மன உரம் பெற்றுச்
சென்றனர்
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment