Saturday, January 23, 2010

[அன்புடன்] வாடையை ஆடையாய் உடுத்தி.....ருத்ரா

வாடையை ஆடையாய் உடுத்தி
=============================================ருத்ரா

வேங்கை வீக்கள் விரி அயல் பரக்க‌
கல்படு தெண்ணீர் வெள்ளருவி இழியும்.
விசும்பு பிளந்தன்ன மழக்களிறு ஆர்ப்ப‌
மூசு வண்டினம் முகப்படாம் போர்த்த‌
கனைக்குரல் தினையை செவ்வலகு பிளந்து
பசுங்கிளி கடிக்கும் பசிய வெற்பம்
பழங்களும் வீழ்த்து வளம் சுரக்கும்மே.
பொதிகை அடுக்கம் பொன் தமிழ் ஓசை
தூஉய் உய்க்கும் நூலொலி நுவலும்
அகத்தியன் ஐந்திணை ஓங்கல் படுக்கும்.
பொருனை யாற்றுக் கரைக்கண் பூத்த‌
எக்கர் ஞாழல் கடலினை ஒக்கும்.
வெள்ளைசங்குகள் சிறகு விரித்தன்ன‌
வெண்குருகுகள் வானம் உழப்பும்.
இருங்கண் முதலை நெடுங்கண் பரப்பி
அகழிகள் காட்டும் வெருவிய காட்சிகள்
ஆற்றுத்திட்டின் பொறிபடர் பாறைகள்
மலியும் கல்லிடைப்பேரூர்
ப‌னைக்காடு சிரிக்கும்
ஓலைக‌ளின் ஓசையில்
பாய்விரித்து கிட‌ந்தாள் பாதை வெறித்து.
க‌த‌ழ்ப‌ரி ச‌லித்த‌ என் காலொலி ப‌டுத்து
விழியின் நீள்வ‌ரி புதையா நின்ற‌
பொய்த்துயில் போர்த்தி நெகிழ்வ‌ளை வீழ‌
என் மெய்கொண்டு த‌ட‌வும் நினைவில் நெய்து
நோற்று இருந்தாள் ம‌ன்னே.
நெடுங்கொடு வாடை ந‌டுக்கிய‌ ந‌ள்ளில்
என்னோடு நிழ‌லாய் துஞ்ச‌
இருள்வெண் காட்டில் இமைக்குள் இருந்தாள்
வாடையை ஆடையாய் உடுத்தி
வாலொளி நுதலின் கசியொளி தன்னில்
என்னொடு த‌ழீஇ நெருப்பில் இருந்தாள்
புல்லிய‌ மூச்சின் அளிய‌ள் தானே!

========================================================================ருத்ரா


--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment