Monday, December 28, 2009

[அன்புடன்] என் நெஞ்சிலோர் ஆலயம்

 

என் நெஞ்சிலோர் ஆலயம்



என் மனதில் ஊறிடும் தமிழைக்

கவியாக்கித் தரவேண்டும்

கண்ணதாசனே காற்றிலேறி

கனவோடு வந்து விடு


நீ தந்த பாடல்கள்

நான் கொண்ட பாடங்கள்

இதயத்தின் முற்றத்தில்

தெறித்து நின்ற சாரல்கள்


முத்தான தமிழெடுத்து

முத்தையா நீ கோர்த்த

முத்து முத்தான பாடல்கள்

முற்றாக நெஞ்சத்தில்

முழுமையாய் நிறைந்திட்டன


கட்டான வரிகள் சேர்த்து

கவிதைகளை அள்ளி வீசினை

கண்ணதாசன் உந்தன்

கவிதை மாணவன்

கவிபாடிக் கேட்கின்றான்

காற்றிலேறி வந்து விடு


தாய் தந்த தமிழ் கொண்டு

நீ சொன்ன வரிகளெல்லாம்

கல்லில் எழுத்துப் போல்

கரையாது உறைந்து போயின


சிந்திக்கும் பொழுதெல்லாம்

தித்திக்கும் வகை செய்தாய்

முந்திவிழும் வரிகளெல்லாம்

உந்தன் வகை கவி சொல்லும்


வெறுமை மிகு இதயத்தில் ஏனோ

வெள்ளிபோல் முளைத்தது

கவியரசன் உன் எண்ணம்

எம்பி எம்பிக் குதித்தது தமிழ்

என் குருவே உன் புகழாய்


வித்திட்டு நான் காத்த

முத்தையா உன் நினைவுகள்

குத்திட்டுக் கவிதையாய் இன்று

குதிர்ந்து வந்து நிற்குதய்யா


நீ சொன்ன வழி சென்று

நான் கண்ட கவிதாலயம்

உனக்காக நான் வரித்த என்

நெஞ்சிலோர் ஆலயம்


அன்புடன்

சக்தி





--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment