[பண்புடன்] இன்னிக்கே வேலைய resign பண்ணுங்க. - சத்குருவின் கட்டுரை
பொருளாதார நெருக்கடியில் இன்றைக்குப் பல இளைஞர்கள் வேலைகளை இழந்துவிட்டனர். அவர்களுடைய எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது. இந்த நிலையில், அவர்களுடைய வாழ்க்கை வளமாவதற்கு என்னதான் வழி?"
''இந்தியா போன்ற தேசத்தில் வேலை இல்லை என்று சொல்வதே தவறு. உங்கள் மூளையும் உடலும் இயங்கும் நிலையில் இருந்தால், கோடி வேலைகள் இங்இங்கேகாத்திருக்கின்றன.
மற்ற தேசங்களைப்போல இல்லை நம் தேசம். இங்கே நூற்றில் தொண்ணூறு பேர் வணிகத்தில் தங்களைச் சுயமாக ஈடுபடுத்திக்கொண்டவர்கள். கிராமத்தில் இருக்கும் பெண்ணைக் கவனியுங்கள். அவளுக்குக் கல்வியறிவு இல்லாமல் இருக்கலாம். ஆனால், தோட்டத்தில் வேலை செய்தோ, கூடை பின்னியோ அவள் தன் குடும்பத்துக்கு ஏதாவது ஈட்டுகிறாள். அவளே அப்படிச் சுயதொழில் செய்து சம்பாதிக்க இயலும்போது, படித்த இளைஞர்கள் வேலை இல்லை என்று புலம்புவதில் அர்த்தம் இருக்கிறதா?
ஒரு விஞ்ஞானக் கதை நினைவுக்கு வருகிறது.
விஞ்ஞானத்தின் உதவியால், மிகத் திறமையான ஒரு சமூகம் உருவாக்கப்படுகிறது. அங்கே பிறக்கும்போதே தொழில்நுட்பம்கொண்டவர்களாக மனிதர்கள் பிறக்கிறார்கள். அந்தத் திறன் இல்லாதவர்களாக மிகச் சிலரே பிறக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு ஒரு மனநலக் காப்பகத்தில் அடைக்கப்படுகிறார்கள். அந்த மனநலக் காப்பகத்தில் மிகப் பெரும் நூலகம் ஒன்று இருக்கிறது. அந்த நூலகத்தில் அறிவியல் தொடர்பான புத்தகங்கள் கிடையாது. கலை தொடர்பான புத்தகங்கள்தான் இருக்கின்றன.
அப்படிச் சிறைப்பட்டவர்களில் ஒருவனால் சும்மா இருக்க முடியவில்லை. நூலகத்தில் தன் பெரும்பான்மையான நேரத்தைச் செலவிடுகிறான். ஒருகட்டத்தில் அங்கிருந்து தப்பிக்கிறான். தப்பித்த வேகத்திலேயே பிடிபடுகிறான்.
ஊருக்கு வெளியே ஓர் இடத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறான். அங்கே தாடிவைத்த வயதான மனிதர் ஒருவர் அவனை அன்புடன் வரவேற்கிறார்.
'இயந்திரம்போல் செயல்பட்டுக்கொண்டு இருக்காமல், தங்களுக்கான பாதையை வகுத்துக்கொண்டு, வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள்தாம் மனித வளர்ச்சிக்கு வித்திடுபவர்கள். அவர்கள்தாம் நாளைய சமூகத்துக்கு மிக அவசியமானவர்கள். இந்த நிமிடத்தில் இருந்து உன் மனதுக்குப் பிடித்தமானதைச் செய்துகொண்டு நீ சுதந்திரமாக இருக்கலாம்' என்று அவனை வழியனுப்புகிறார்.
வேலைகளை இழந்திருப்பவர்கள் இயந்திரம் போன்ற வாழ்க்கையில் இருந்து விடுபட்டதாக நினைத்துத் தங்களுக்கான பாதையைத் தேர்ந்தெடுக்கக் கிடைத்த அவகாசமாக இதை நினைக்க வேண்டும்.
உங்கள் கருத்தில் வளமாக வாழ்வது என்றால் என்ன? சொந்தத்தில் ஒரு வீடு, ஆசைப்பட்ட கார், அணிவதற்கு விலை உயர்ந்த உடைகள் போன்றவைதானே? இப்படி அமெரிக்கச் சிந்தனைகளைவைத்து வளமாக வாழ்வதன் அளவுகோல்களை முடிவுசெய்யாதீர்கள். சமூகத்தில் எதைக் கொண்டாடுகிறார்களோ, அதை நீங்கள் சொந்தம் ஆக்கிக்கொள்வதா வளம்?
இங்கே பெரிய பங்களாவாகத் தோன்றுவது, வேறு ஒரு நாட்டில் சிறு வீடாகத் தோன்றக்கூடும். எனவே, உண்மையான வளம் அது அல்ல. உண்மையில், வளமாக வாழ்வது என்றால், ஆனந்தமாக வாழ்வது என்று அர்த்தம். உங்களிடம் என்ன இருக்கிறது என்பது இந்த வளத்தைத் தீர்மானிப்பதில்லை. எப்படி இருக்கிறீர்கள் என்பதுதான் அதைத் தீர்மானிக்கிறது.
ஒரு சிறிய குருவி பறந்து பறந்து இரை கிடைக்காததால் சோர்ந்துபோய் பறக்க முடியாமல் மயங்கி விழுந்துவிட்டது. அப்போது அவ்வழியே சென்ற பசு, சாணத்தை அந்தக் குருவியின் மீது போட்டுவிட்டுச் சென்றது. சாணத்தின் வெதுவெதுப்பில் குருவி உணர்வு பெற்றது. கீச் கீச் என்று கத்தியது. கழுகு ஒன்று சத்தம் கேட்டு சாணத்தைக் கிளறிக் குருவியைக் கொத்திப்போனது.
உங்கள் மீது சாணத்தை வீசுபவர்கள் எதிரிகளும் அல்ல. அதிலிருந்து மீட்டு வெளியே எடுப்பவர்கள் நண்பர்களும் அல்ல. புதிய பாதையைத் தேர்ந்தெடுக்க உதவிய விதத்தில் வேலையில் இருந்து நீக்கியவர்களை நன்றியுடன் நீங்கள் பார்க்கக்கூடும்.
ஆனந்தமாக வாழ்வதற்கு உள்ளே தயார்ப்படுத்த வேண்டும். வெளியில் இருக்கும் வசதிகள் எந்தவிதத்தில் அதற்கு உதவப்போகின்றன?
ஈஷா யோக மையத்தின் ஆசிரமத்தை வெள்ளியங்கிரி அடிவாரத்தில் துவக்கியபோது, வகுப்புகள் சாதாரணக் கீற்றுக் கொட்டகைகளில்தான் நடந்தன. மழை பெய்தால், தலைக்கு மேலே இருந்து நீர் சொட்டிக்கொண்டே இருக்கும். 'ஐயோ, இங்கே இப்படிக் குடிலில் கஷ்டப்படுகிறோமே' என்று ஒரு «பாதும் நினைத்ததில்லை. இன்றைக்கு கான்க்ரீட் கூரையுடன் மாபெரும் கூடத்தில் வகுப்புகள் நடக்கின்றன. அப்போது எவ்வளவு அர்ப்பணிப்புடன் ஆனந்தமாக வகுப்புகள் வழங்கப்பட்டனவோ, அதே அர்ப்பணிப்புடன், அதே ஆனந்தத்துடன்தான் இப்போதும் வழங்குகிறேன். வெளிவசதிகள் மாறியதால், எனக்கு உள்ளே எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை.
கரடுமுரடான பாறையில் படுத்து உறங்கினாலும், மெத்தென்ற சோபாவில் படுத்து உறங்கினாலும் என்னால் ஒரே மாதிரி நிம்மதியாக, நிறைவாக உறங்க முடியும். மிகச் சிறந்த காலணிகள் அணிந்து சந்தோஷமாக நடக்கவும் முடியும். இன்றைக்குக் காலணிகள் இல்லையா, அதைப் பொருட்படுத்தாமல், அதே ஆனந்தத்துடன் காலில் செருப்பு இல்லாமலும் நடக்க முடியும்.
சென்ற நூற்றாண்டில், ஸ்பெயின் தேசத்தின் மிகச் சிறந்த கவிஞராக விளங்கிய அன்டானியோ மச்சதோ (Antonio Machado) சொன்னார், "யாரோ போட்டுவைத்த பாதையில் நடப்பவர்களைவிட அடுத்த பாதையை வகுத்துக்கொடுப்பவர்களைத்தான் இந்தப் பூமி விரும்புகிறது. எந்தப் பாதையில் நீங்கள் திரும்பிப் பார்த்தாலும், அந்தப் பாதையை உருவாக்கிச் சென்றவர்களின் காலடித்தடங்கள் இருக்கும். உங்களுடைய காலடித்தடங்கள் எந்தப் பாதையை உருவாக்கப்போகின்றன?"
உங்கள் திறன், உங்கள் உடல், உங்கள் மனம் இவற்றை முழுமையாகப் பயன்படுத்தி வேலைசெய்து பாருங்கள். ஆனந்தமாக, முழுமையாக உங்களை அர்ப்பணித்துக்கொண்டு, பணி செய்யும்போது கிடைக்கக்கூடிய நிறைவு மற்றதைச் சொந்தமாக்கிக்கொள்ளும்போது கிடைக்கப்போவதில்லை.
ஒருமுறை ஒரு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்த கப்பலில் மிகப் பெரும் பனிக்கட்டிகள் (ice bars) எடுத்து வரப்பட்டிருந்ததன. இறக்குமதி செய்வதற்கான பொதுவான பட்டியலில் பனிக்கட்டி இல்லாததால், அதுபற்றி சுங்க இலாகா, அரசிடம் விசாரித்தது. நிறைய விவாதங்களுக்குப் பிறகு அது உலர்ந்த நீராக வகைப்படுத்தப்படலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அனுமதி வழங்கப்பட்டு இறக்குமதியாளர் கப்பலுக்குப் போவதற்குள் அந்தப் பனிக்கட்டி முழுவதுமாகக் கரைந்து காணாமல் போயிருந்தது.
என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றால், அப்படித்தான், உள்ளதும் காணாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது. இப்போது உள்ள சூழ்நிலையில் நீங்கள் தேவைப்படும் இடம் எதுவென்று கவனியுங்கள். அல்லது, ஆனந்தமாக வாழ்ந்து பாருங்கள். உங்களைச் சுற்றி சரியான சூழ்நிலை தானாக அமையும்.
கடினமான கற்பாறையில் அமர்ந்திருக்கிறீர்களா, மெத்தென்ற குஷன் சோபாவில் அமர்ந்திருக்கிறீர்களா என்பது வளத்தை முடிவு செய்வதில்லை. நீங்கள் ஆரோக்கியமாக, ஆனந்தமாக, நிறைவாக வாழ்வது தான் வளமாக வாழ்வதற்கான அடையாளம்!
நன்றி ஆனந்த விகடன். - எழுத்தாக்கம் சுபா ---
J. HAJA MUHAYADEEN
ஆயிரம் மைல் பயணம் - முதல் அடியில் தொடங்குகிறது
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
0 comments:
Post a Comment