[அன்புடன்] சொல்லச் சொல்ல இனிக்குதடா . . . (3)
குறைகளைச் சுட்டிக் காட்டுபவனே உண்மையான நண்பன்
=======================================================
அதோ அவன் தான் எனது உற்ற நண்பன் என்று பெருமையாக நாம் சுட்டிக்
காட்டுகிறோம். ஆனால் நண்பர்கள் என்பதற்கு எம் மனதில் உண்மையான அர்த்தத்தை
எம்மில் எத்த்னை பேர் புரிந்து கொண்டுள்ளோம் என்று எண்ணிப்பார்த்தால்
விடை மிகவும் ஆச்சரியத்தைக் கொடுக்கும்.
இந்த உற்ற நண்பன் என்பதன் அர்த்தத்தை நான் சரியாகப் புரிந்து கொள்வதற்கு
பல காலங்கள் எடுத்தது என்பதுவே உண்மையாகும்.
நண்பன் என்றால் நாம் கஷ்டப்படும் போது உதபுபவன், நாம் கொண்டிருக்கும்
அனைத்துக் கருத்துக்களோடும் ஒத்துப் போகும் மனப்பாங்கைக் கொண்டவன்
என்னும் தப்பான அபிப்பிராயம் பல காலங்கள் மனதில் நிலை கொண்டிருந்தது.
நான் மனதில் கொண்டிருக்கும் ஒரு கருத்துக்கு எதிராகவோ அன்றி
அக்கருத்தினால் நான் எடுக்கும் நடவடிக்கை தவறு என்றோ எனது நண்பன்
சுட்டிக் காட்டும்போது அது அவனால் எனக்கு எதிராக கொள்ளப்படும் கருத்து
என்றும், அவன் என்னைத் தனிப்பட்ட முறையில் எதிர்க்கிறான் என்றும் தவறாக
நான் புரிந்து கொண்ட சந்தர்ப்பங்கள் பல.
அதன் காரணமாக எத்தனையோ பொன்னான பொழுதுகளை வீண் தர்க்கத்தில் ஈடுபட்டு
நான் பாழாக்கிய பொழுதுகள் பல.
சே அவன் எப்படி போனால் என்ன ? நாம் அவனோடு ஒத்துப் போய்விட்டால் பொழுதை
இனிமையாகக் கழித்து விடலாம் என்று எண்ணி நாம் சொல்லும் கருத்தோ அன்றி
நமது செய்கையோ தவறாக இருந்தாலும் அத்தோடு ஒத்துப் போகும் ஒருவனை எமது
உண்மையான நண்பன் என்று எடுத்துக்கொள்ள முடியாது.
எனது நண்பன் கோபித்தாலும் பரவாயில்லை அவன் தவறான ஒரு முடிவை எடுத்து அதன்
மூலம் வரும் பின் விளைவுகளைச் சந்திக்கும் அவலத்துக்கு விட்டு
விடக்கூடாது என்னும் எண்ணத்தில் நண்பனுடன் வாதம் செய்து அவனுக்கு
உண்மையான நிலையை உணர்த்துபவர்களே உண்மையான நண்பர்களாக இருக்க முடியும்.
இது எனது வாழ்விலே காலங்கடந்து நான் உணர்ந்து கொண்ட ஒரு உண்மை. இதை உணரத்
தடையாக இருந்தது என் மனதில் நான் கொண்டிருந்த ஒரு மாயை ஆனல் அம்மாயையை
அனுபவங்கள் எனக்கு அறியத்தந்து உண்மையான நண்பர்களை அடையாளம் காட்டியது.
சக்தி சக்திதாசன்
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment