[அன்புடன்] சித்தரின் சித்தத்திலே ! . . . (3)
சித்தரின் சித்தத்திலே ! . . . (3)
============================
நாகப்பட்டினத்திலே சமாதி அடைந்ததாகச் சொல்லப்படும் "அழுகணிச் சித்தரின்"
பெயர் ஏற்பட்டடதிற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.
இவரது பாடல்களிலுள்ள அர்த்தங்கள் எமது மனங்களின் சிந்தனைச் சக்கரத்தைச்
சுழற்றி வாழ்க்கையின் உண்மைநிலையை சிந்திக்கப் பண்ணுகிறது.
இவரது பாடல்கள் ஒப்பாரி முறையில் இருந்தாலும் அப்பாடல்களிலே ஒளிரும்
அனுபவ ஞானம் அளப்பரியது.
கண்ணம்மா என்னும் ஒரு பெண்ணிடம் தனது மனக்கருத்துக்களை ஒப்பிப்பது போன்ற
பாணியிலேயே இவரது பாடல்கள் அமைந்திருக்கும்.
என் கண்ணம்மா - உன்
அடி சேர எனக்கு ஆசை இல்லை
என்றா எண்ணுகிறாய் ?
உப்பு நீரைச் சுமந்து
அழுக்குகாகி நாறும் உடம்புதான்
நான் கொண்டது
இப்பிறப்புப் போலல்லாது
வேறொரு பிறப்பெடுக்க – எனக்கு
வழி இல்லைக் கண்டாயா ?
வழி மட்டும் கிடைத்திருந்தால்
இவ்வழுக்கு உடம்பை விட்டு
உன்னிடம் நான் வந்திருக்க மாட்டேனா ?
**** சக்தி சக்திதாசன் ****
தினமும் உண்கிறோம், கழிவகற்றுகிறோம், உலக் ஆசையில் கிடந்து உழல்கின்றோம்.
இந்த உடம்பு அழுக்குகளிலானது தானே. சே ! இப்படியான பிரவியிலிருந்து
விடுதலை கிடைக்கும் மார்க்கம் மட்டும் எனக்குத் தெரிந்திருந்தால்.
அம்மார்க்கம் வழி சென்று உன் திருவடிகளை அடைந்திருக்க மாட்டேனா ?
கண்ணம்மா என்று அழுகணிச் சித்தர் அப்பழுக்கற்ற உண்மையே அடித்துப் போட்டு
உடைத்து விடுகிறார்.
இதை அவர் பாணியில் அவர் எவ்வாறு கூறியிருக்கிறார் என்று பார்ப்போமா ?
"ஊத்தைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊத்தைச் சடலம் விட்டே - என் கண்ணம்மா
உன் பாதம் சேரேனே?
மிகவும் அழகாக வாழ்க்கையின் தத்துவத்தை கூறிய சித்தரின் சித்தத்தை எண்ணி
வியக்காமலிருக்க முடியுமா ?
சக்தி சக்திதாசன்
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment