[தமிழமுதம்] கலைஞன் ! காதலன் ! கணவன் !
கலைஞன் ! காதலன் ! கணவன் !
சி. ஜெயபாரதன், கனடா
உடலை மெழுகாக்கி உன்னை
ஓவியமாய் உருவாக்கிச்
சிற்பமாய்ச் செதுக்கி,
ஒப்பனை செய்து
உலகுக்குக் காட்டுபவன்,
கற்பனைக் கலைஞன் !
உள்ளத்தின் மேல் படையெடுத்து,
வெள்ளைப் புறாவைத் தூதுவிட்டு,
இதயத்தைத் துணைக்கோளாய்
ஈர்ப்பில் சுற்றுபவன்
ஈசல் காதலன் !
உரிமைச் சிறையி லிட்டு, உன்னை
உயிருள்ள மட்டும் மூடி,
உள்ளமற்ற உடலாய்,
உடமைப் பண்டமாய்,
உரிமைப் பிண்டமாய்,
பம்பரமாய்,
பசும் பொன்னாய்ப் பேணுவோன்
அசுரக் கணவன் !
காதலனுக்கு வேட்கை
உன் துடிப்பு !
கலைஞனுக்கு தேவை
உன் நடிப்பு !
கணவனுக்கு வேண்டும்
உன் முடிப்பு !
கலைஞன், காதலன், கணவன் என்ற
முப்பெரும் அவதாரம்
ஒப்புடன் நிற்குமா
ஓருடலில் ?
ஒருநாள் விருந்து நீ
ஓவியக் கலைத் தூரிகைக்கு !
சிலநாள் கனவு நீ
சிந்தை நுழை காதலனுக்கு !
பலநாள் அமுத சுரபி நீ
பசும்பொன் தரும் கணவனுக்கு !
வீணையாய் உன்னை மீட்டுபவன்
கலைஞன் !
தேனிசை நாதமாய்த் தீட்டுபவன்,
கலைஞன் !
மானாய், மயிலாய் உனைக் காட்டுபவன்,
கலைஞன் !
நடன ராணியாய், நடிகைச் சுடராய்ப்
படமெடுத் துன்னை
மதுவாய் மாற்றுபவன் கலைஞன் !
ஊதியம் தந்து
நாடக மாடும் கலைஞன்
வாடகை வர்த்தகன் !
கள்வெறிக் கவிதையில் புரட்டிக்
காவியக் கருவாக்கி
கனவிலே தேடி ஏங்குபவன்
உன்னாசைக் காதலன் !
பொன்னுடல் மீது
போக மது ஊற்றுபவன் !
வலையிட்டுத் தலையிட்டுப்
பூவாக்கி, தேனாக்கி
தேவ மாதாக்கித்
தினமும் பூசிப்பவன்
உன் காதலன் !
உள்ளத்தைக் கொள்ளை இட்டு
உடலை மென்று விட்டு
ஓடி மறைபவன்
உன்னிச்சைக் காதலன் !
உன் காதலன் ஒரு
கணவ னில்லை !
உன் கணவன் ஒரு
காதல னில்லை !
உன் காதலன் ஒரு
கலைஞ னில்லை !
உன் கலைஞன் ஒரு
கணவ னில்லை !
உன் கணவனும் ஒரு
கலைஞ னில்லை !
உன் கலைஞனும்
ஒரு காதல னில்லை !
காதலன் கணவ னானதும்
காதல் தேய்பிறை
ஆகுது !
கணவன் காதல னாகின்
காதல் மதிலைத்
தாண்டுது !
கலைஞன் கணவ னானதும்
கலைக்கண் பிறரை
நாடுது !
கணவன் கலைஞ னாகின்
கவர்ச்சி வேறிடம்
தேடுது !
கவர்ச்சிப் பெண்ணே ! உன்
காந்த உடல் கணவனுக்கு !
அலைமோதும் உள்ளம்
காதலனுக்கு !
ஆணிவே ரான ஆத்மா
கலைஞனுக்கு !
முப்பெரும் பொறிகளையும் இறைவன்
ஒருவனுக்கு அளித்திடான் !
மும்மூர்த்திகள்
வேண்டும் உனக்கு !
+++++++++++++++++++
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment