Tuesday, February 16, 2010

Re: [தமிழமுதம்] ரிக் வேதம்

மதிப்புக்குரிய ருத்ரா,
 

ரிக் வேதத்தைப்
பக்குவமாய்த் தமிழ்ப் படுத்தி
தக்க வழியில்
வலைப் பின்னலில்
இலையில் இட்டுப்
பரிமாறு வதற்கு எமது
பாராட்டுகள்.
சீராய்த் தொடரட்டும் ! ‌


அன்புடன்
ஜெயபாரதன்

++++++++++++++++++++++++++++

2010/2/16 ருத்ரா (இ.பரமசிவன்) <epsivan@gmail.com>
ரிக் வேதம்
====================================
(நூல்..1 ;பாடல் 1) (Book I ;Hymn..1)

(மொழி பெயர்ப்பு அல்ல.ஒளி பெயர்ப்பு)
=============================================ருத்ரா.

(இது ரால்ஃப் டி.ஹெச்.க்ரிஃப்பித் (1896) என்பவரின் ஆங்கில மொழி
பெயர்ப்பிலிருந்து எடுத்து எழுதப்பட்டது.அவர்க்கு என் நன்றியும்
மரியாதையும் உரித்தாகுக.

ரிக் வேதம் எனும் ஒலி அருவியில் வேறுபாடுகளை மறந்து குளிக்கலாம்.
அது இரு இனங்களின் இடையே உள்ள எதிர்ப்பும் கலப்பும் போரும் வெறுப்பும்
புலம்பலும் புகழுரையும் கொண்டது.பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே
காட்டாறாய்  ஒடி மறைந்த வரலாற்றின் சுவடுகள் அதிகமாகவே பொதிந்து
கிடக்கின்றன.காழ்ப்புக‌ளை விட்டு விட்டு க‌ளிப்புக‌ளை ம‌ட்டும் குவித்து
வைத்து கும்மி பாட‌லாம்.)



தீயே போற்றி!
===============================================ருத்ரா.
1.

தீயே போற்றி!
இறைவ‌னைக்காட்டும்
விர‌ல்க‌ளாய்
உய‌ர்ந்து காட்டும்
தீயே போற்றி!
அத‌ன் சிவ‌ப்பு உயிர்ப்புக்குள்
புகுந்தால்
அதுவே இறைவ‌ன்.
அதுவே உண‌வு.
அதுவே ப‌சி.
அத‌ற்கே அது ப‌லி!
தீயே பூசாரி.
தியே
ந‌ம் செல்வ‌ங்க‌ளின்
உயிர்க‌ளின்
க‌ருவூல‌ம்.
க‌ருமூல‌ம்.

2

தீயைப்போற்றுவ‌தே
ந‌ம்மை த‌குதியாக்குவ‌து.
முன்னே முகிழ்த்த‌வ‌ர்க‌ளின்
முறை அது.
க‌ட‌வுள் வ‌டிவ‌ங்க‌ளூக்குள்
ஆவி செலுத்துவ‌தே அது.
ஆகுதியாவ‌து ம‌ட்டுமே நாம்.

3.

ம‌னித‌ன் பெறும் செல்வ‌ங்க‌ள்
தீயின் வழி தான்.
தின‌ம் தின‌ம் வ‌ள‌ரும் அது.
ம‌னித‌ருள் மாம‌னித‌ர்க‌ள்
அவ‌ர்க‌ள் சிற‌ப்புக‌ள்
யாவும்
அந்த‌ நெருப்பின் வெளிச்ச‌மே!

4

நாக்குக‌ள் போல்
வாரிச்சுருட்டி எரியும் அது
நேர‌டியாய்
இறைவ‌னுக்கே உண‌வு.
அதில் எரிவ‌து
ந‌ம் அறிவு..சிந்த‌னைக‌ள்.
தீ நுட்ப‌மாய்
சூட்டின் மொழியில் சொல்வ‌தே அது.
ந‌ம் எரியும் அறிவுப்பிழ‌ம்பு
இறைவ‌னுக்கு உண‌வு.
ஆம்.
நாம் சிந்திக்க‌வில்லை யென்றால்
நாமும் இல்லை
அவ‌னும் இல்லை.


5.

அந்த‌ தீயின் க‌ண்க‌ளைப்பாருங்க‌ள்!
யாரையோ தேடுவ‌து போல் இல்லை?
தீ... உண்மையான‌ பூசாரி.
அத‌ன் க‌ண்க‌ள் அறிவின் கொழுந்துக‌ளால்
இறைவ‌னைத்தேடுகின்ற‌ன‌!
உண்மைக்கும் உண்மையான‌
வெளிச்ச‌த்தை காட்டுவ‌து அது!
சிற‌ப்பின் பெருஞ்சுட‌ர் அது.
க‌ட‌வுள் த‌ன்
எல்லா வ‌டிவ‌ங்க‌ளோடும்
சிறு க‌ட‌வுள்..பெருங்க‌ட‌வுள்
எல்லாவ‌ற்றின்
விஸ்வ‌ரூப‌த்துட‌ன்
அதில் வ‌ருகிறார்.

6.

உன்னை போற்றுவ‌ர்க‌ளுக்கு
தீயே
உன் வாழ்த்துக்க‌ள்
இத‌மாக‌ இத‌ய‌ம் நுழைந்து
க‌த‌ க‌த‌ப்பாக்கும்.
அன்பில் க‌சியும்.
தீயே
உன‌க்கு ஒரு உட‌ல் செய்து
உயிர் பாய்ச்சுவோம்.
உன‌க்கும் ஒரு
"ப‌ஞ்ச‌ க‌ச்ச‌ம்"த‌ரித்து பார்ப்போம்.
இது பொம்மை அல்ல‌.
இது உண்மை.
அதுவே எங்க‌ள் "அங்கிர‌ஸ்".


7.

இருட்டை உரித்து
வெளிச்ச‌ம் த‌ரும் தீயே!
ப‌க‌ல் எனும் செடி
மெது மெது வாய்
துளிர் விட்டு மொட்டு விட்டு
வெண் பூவாய் விரியும்.
எங்க‌ள் உள்ள‌த்து விதையிலிருந்து
வ‌ழிபாடும் அப்ப‌டியே!
உன‌க்கு
ம‌திப்பும் மேன்மையும் தர‌
இதோ இங்கே
வ‌ந்திருக்கிறோம்.


8.

தீயே
உன‌க்கு வ‌ழ‌ங்கும்
இந்த‌ கொடைத‌னை
நெறிப்ப‌டுத்துவ‌து நீ
முறைப்ப‌டுத்துவ‌து நீ
மாறாத‌ வ‌ரைமுறைக‌ளின்
காவல் உன் கையில்.
ஒளிர்வ‌ண்ண‌மே!
வ‌ள‌ர்ந்து வ‌ள‌ர்ந்து
நீ ப‌ர‌ப்பும் வெளிச்ச‌மே
உன் கோவில்.

9

த‌ந்தை ம‌க‌ற்கு ஆற்றுவ‌து போல்
அருகில் வ‌ந்து
அண்ணித்து அர‌வ‌ண‌க்கிறாய்.
தீயே!
எங்க‌ளின் வ‌ள‌ம் நீ
எங்க‌ள் க‌ள‌ம் நீ
வ‌ள‌ம் த‌ருவ‌தால் நாங்க‌ள்
வ‌ல‌ம் வ‌ருகிறோம்
உன்னை.

===============================================

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment