Friday, February 5, 2010

[தமிழமுதம்] தவறான வழியில் பிறந்த குழந்தையால் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள ஜனாதிபதி


 
 



தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜாகொப் ஸுமா, எயிட்ஸ் நோய் தடுப்பு தொடர்பான அரசாங்கத்தின் செய்தியை பொய்யாக்கும் விதத்தில் நடந்து கொண்டுள்ளதாக அந்நாட்டு பிரதான எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

யாகொப் ஸுமா திருமணத்திற்கு அப்பாலான காதல் தொடர்பு ஒன்றின் மூலம் கடந்த வருடம் குழந்தையொன்றுக்கு தந்தையாகியுள்ளதாக மேற்படி ஜனநாயக கூட்டமைப்பு கட்சி வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஸுமாவுக்கும் ஸொனோனோ கொஸா (39 வயது) என்ற பெண்ணுக்கும் ஏற்பட்ட திருமணத்துக்கு அப்பாலான காதல் தொடர்பால் அப் பெண்ணுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் பெண் குழந்தையொன்று பிறந்துள்ளதாக மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸொனோனோ கொஸா, ஸுமாவின் நண்பர்களில் ஒருவரும், உலகக் கிண்ண விளையாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைவரும் தென் ஆபிரிக்க உதைபந்தாட்டத் துறையில் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தவருமான ஐர்வின் கொஸாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஸொனோனோ கொஸா, வங்கியொன்றில் முக்கிய பதவியை வகித்து வருகிறார்.

இந்த வருட ஆரம்பத்தில் 5 ஆவது தடவையாக திருமணம் செய்துகொண்ட ஸுமாவுக்கு குறைந்தது 20 பிள்ளைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், ஸுமா தனக்கு உண்மையில் எத்தனை பிள்ளைகள் உள்ளனர் என்பது குறித்து தெரிவிக்க மறுத்து வருகிறார். இந்நிலையில், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் பிறந்த குழந்தை தொடர்பில் ஸுமாவின் "ஏ.என்.சி." கட்சியோ அன்றி சொனோனோ கொஸாவோ கருத்து எதனையும் இதுவரை வெளியிடவில்லை.

இது ஸுமாவின் தனிப்பட்ட விவகாரம் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

2006 ஆம் ஆண்டில் ஸுமா மீது பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது, பாதுகாப்பற்ற முறையில் பாலியல் தொடர்பு வைத்துக்கொண்டது தனது தவறு என அவர் ஏற்றுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கூட்டமைப்புக் கட்சி, ஜனாதிபதி பல பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் பாலியல் தொடர்புவைத்து, எயிட்ஸுக்கு எதிரான அரசாங்கச் செய்திக்கு முரணாக நடந்துகொண்டுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளது.

பலதார திருமணத்துக்கு தென் ஆபிரிக்க சட்டம் அனுமதியளிப்பதுடன், ஜனாதிபதியின் ஸுலு இனத்தவர்கள் மத்தியில் பலதார திருமணம் முக்கிய அம்சமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

 
 
 
 



--
www.translations.tk
www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment