Thursday, February 4, 2010

[அன்புடன்] நூல் விமர்சனம்

நூலின் பெயர் : வசந்தவாசல் கவிதைக் களஞ்சியம் - 2010, நூல்விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
 
 
தொகுப்பு ஆசிரியர் : கவிஞர் கோவை.கோகுலன்

வெளியீடு : கோவை வசந்தவாசல் கவிமன்றம்

விலை : ரூ.175

கோவையில் உயிர்ப்போடு இயங்கி வரும் வசந்தவாசல் கவிமன்றத்தின் வெளியீடாக கவிதைக்களஞ்சியம் 2010 வெளி வந்துள்ளது. மனித்தேனீ கவியருவி கவிஞர் கோவை கோகுலன் அவர்களின் தொகுப்பாக 464 கவிதைகள் வெளிவந்துள்ளது. அனேகமாக தொகுப்பு நூலில் இதுதான் பெரிய நூலாக இருக்க வேண்டும். அடுத்து இவர்களின் இலக்கு 1000 வெற்றி பெற வாழ்த்துக்கள். நூல் வெளியீட்டு விழாவை மாநாடு போல நடத்திடும் மாண்பாளர்கள்.

தமிழன்னைக்கு அணிகலன் பூட்டும் விதமாக வருடந்தோறும் இதுபோன்ற தொகுப்பு நூலை வெளியிட்டு சாதனை படைத்து வருகிறார்கள். எல்லாம் உண்டு இந்த நூலில் என்று சொல்லுமளவிற்கு மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை என பலவகை பாக்களின் அணிவகுப்பு.பொறியாளர் முதல் கூலித்தொழிலாளி வரை சகல மாணவர்களும் இந்த தொகுப்பில் பங்குபெற்று இருப்பது சிறப்பு. கவிஞர்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தும் பாலமாக நூல் உள்ளது. கவிஞர்களின் புகைப்படம், முகவரி, கவிதை என மூன்றும் இடம் பெற்றுள்ளது. "கபடத்தன கட்டுமானங்களுக்குள் கட்டுப்படாதவன் கவிஞன் அறிவார்ந்த அவனது அலசல்களிலும் வீரியம் மிக்க விமர்சன வீச்சுக்களிலும் அனலின் ஆடும் ஆடும், புனலின் குளிர்வும் விழும். மழலைத் தனமும் மலிந்து இருக்கும், மாண்பற்ற மனித எழுச்சியும் நிறைந்திருக்கும், அவனுள் எழுகின்ற ஆர்வங்களாலும்,ஆசைகளாலும் ஆராதனைகள் நிறைந்திருக்கலாமே தவிர அச்சமின்மை மிகுந்தே இருக்கும். "அதனால்தான் எப்போதுமே கவிஞன் சாதாரணர்களிலிருந்து வேறுபட்டு நின்று நிலைகின்றான்." என்ற கருத்து தொகுப்பாசிரியர் கூறப்பட்ட கூற்றுப்படி நூல் உள்ளது. புயலும் உள்ளது, மழையும் உள்ளது.இடியும் உள்ளது,மயிலிறகால் வருடுவது போன்ற கவிதைகளும் உள்ளது. சவுக்கடி கவிதைககளும் உள்ளது உள்ளத்தில் உள்ளது கவிதை என்றபடி கவிஞர்களின் உள்ளத்தில் உதித்த உணர்வுகளின் தொகுப்பு இந்நூல் கட்டுப்பாடு அற்ற சுதந்திரப்பறவை கவிஞன் யாருக்கும் எவருக்கும் அஞ்சாத அக்னிக்குஞ்சுகளின் அணிவகுப்பு.

என்னுடைய ஹைக்கூ கவிதைகளும் புதுக்கவிதைகளும் இந்நூலில் இடம்பெற்று இருப்பதை பெருமையாகக் கருதுகின்றேன். மிகப்பெரிய மரபுக்கவி மன்னவர்கள் முதல் முதல் கவிதை எழுதிய மாணவன் வரை அனைவரின் கவிதையும் நூலில் இடம் பெற்றுள்ளது. முத்து முத்தாய்ப்பான கவிதைகள் சிந்திக்க வைக்கின்றன.

வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளுக்கு உடனடியாக நூல் வெளியிடும் வாய்ப்பு கிடைப்பதில்லை. தன்னுடைய கவிதையை அச்சில் பார்க்க விரும்பும் இளையவர்களை வளர்த்து விடும், கவிஞர்களின் வேடந்தாங்களாக கோவை வசந்தவாசல் கவிமன்றம் உள்ளது. மன்றத்தின் பெயரிலேயே வசந்தம் இருப்பதால் கவிஞர்களுக்கு வசந்தத்தை வாரி வழங்கி வருகின்றது. இளம் படைப்பாளி தன் படைப்பை நூலில் அச்சில் பார்த்துவிட்டால் பரவசம் அடைந்து இன்னும் எழுத வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை தரும். அந்த வகையில் இந்த நூல் பலருக்கு ஊக்கம் தந்துள்ளது. பல்சுவை கவிதை நூலாக உள்ளது. பாராட்டுக்குரிய முயற்சி இது.

தொகுப்பு நூல் வெளியிடுவதில் சாதனை படைத்த கோவை வசந்தவாசல் மன்றத்திலிருந்து கவிதை கேட்டு அழைப்பு எப்போது? வரும் என காத்திருக்கும் கவிஞர்களில் நானும் ஒருவன். காரணம் தொகுப்பு நூலிற்காக ரூ.100 நூறு மட்டும் பங்களிப்பாக கவிஞர்களிடமிருந்து பெற்ற புகைப்பட்ம் முகவரி கவிதை மூன்றும் நூலில் இடம் பெறச்செய்து வருடம்தோறும் திட்டமிட்ட தேதியில் தவறாமல் தொகுப்பு நூல் வெளியிடும் மன்றம். இதனை தொழிலாகக் கருதாமல் தொண்டாகக் கருதி செயல்பட்டு வருகின்றனர். நினைத்து பாருங்கள் 464 கவிதைகள் நூலில் உள்ளது. ஒரு சிலர் மட்டும் இரண்டு கவிதைகள் எழுதி உள்ளனர்.450 கவிஞர்களை ஒருங்கிணைத்த பெருமை மன்றத்தையே சாரும். மன்ற பொருப்பாளர்களை பாராட்ட வேண்டும். கடின உழைப்பின் சாதனை தொகுப்பு இது. பங்குபெற்ற அனைவருக்கும் நூலும் பாராட்டு சான்றிதழும் வரும் சிறந்த கவிதைக்கு பரிசும் உண்டு. கிரி தொடங்கி கவிஞர் மானூர் புகழேந்தி வரை இடம் பெற்றுள்ள அத்துணை கவிதைகளும் அற்புதம். தொகுப்பு நூல் என்பதால் கவிதையே மேற்கோள் காட்டவில்லை. கவிதை ஆர்வலர்கள் அவசியம் வாங்கிப்படிக்க வேண்டிய அற்புத நூல். நேர்த்தியான அச்சு நல்ல வடிவமைப்பு. சுறுசுறுப்புத் திலகமாக விளங்கும் தொகுப்பு ஆசிரியர் கவிஞர். கோவை கோகுலன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நூலின் பெயர் : இதயத்தில் ஹைக்கூ, நூல் விமர்சனம் : கவிஞர் மு.அர்ச்சுனன்
 
 
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி

பகட்டு இல்லாத கவிதைகள் காலம் காலமாக மாறிவந்துள்ள தமிழ்க்கவிதை வடிவத்தில் ஒரு சிறப்பான வடிவம் ஹைக்கூ. ஜப்பானிய கவிதை வடிவமான "ஹைக்கூ" வை முதன் முதலில் அறிமுகம் செய்தவர் சுப்பிரமணிய பாரதியார். பாரதியாரின் புகழ்பெற்ற "அக்கினிக் குஞ் சொன்று கண்டேன்" என்ற கவிதை ஹைக்கூ மாதிரியான சிறிய வடிவத்தில் எழுதப்பட்ட கவிதைதான். பாரதிதாசனும் இதேபோன்ற சிறிய வடிவக் கவிதைகளை தனது "அழகின் சிரிப்பு" என்ற நூலில் நிறையவே முயற்சி செய்துள்ளார். அதற்குப் பிறகு இன்று வரை "ஹைக்கூ" கவிதைகளை எழுதுவதற்கான பல கவிஞர்கள் தமிழில் ஏராளமானோர் வந்துவிட்டனர். இதில் கவிஞர் இரா.இரவிக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு.

ஹைக்கூவிற்கு மூன்று வரிகள் வேண்டும். முதல் அடி 5 சீரிலும், இரண்டாவது அடி 7 சீரிலும் மூன்றாவது அடி 5 சீரிலும் அமைக்கப்பட வேண்டும். ஆனால் தமிழில் எழுதப்பட்டுவரும் ஹைக்கூக்கள் இந்த இலக்கண விதிப்படி எழுதப்படவில்லை. மூன்று வரி என்ற வரையறையை மட்டும் எடுத்துக்கொண்டனர். இரவியின் கவிதைகள் இதே வரையறையைத்தான் கொண்டுள்ளன.

இரவியின் கவிதைகள் எளிமையாக இருப்பதே. அவர் கவிதை பரவலாக சென்றடைந்ததற்குக் காரணம்.

தாய் இருக்க சேய் !
சேய் இருக்க தாய் !
சுனாமிக் கொலை.


என்ற கவிதையையும்,

உள்ளுரில் இனவெறி !
வெளிநாட்டில் நிறவெறி
உலக அமைதியே கேள்விக்குறி


என்ற கவிதையையும் உதாரணமாகச் சொல்லலாம். புரியாமல் எழுதினால் தான் கவிதை என்ற சிந்தனை. இன்று நவீன எழுத்தாளர்கள் பலரிடம் உள்ளது. இந்தத் தாக்கத்திலிருந்து விடுபட்டவர் ரவி. இவருடைய கவிதைக் களம் சமூகத்தின் நிகழ்காலப் பிரச்சனைகளை கருவாகக் கொண்டுள்ளது.

இனிக்கவில்லை வாழ்க்கை
கரும்பு நட்டத்தில்
நட்டம்


என்ற விவசாய பிரச்சனைகளைப் பேசும் போதும்,

ஏமாற்றுவேலை
உலக அழகிப்போட்டி
ஓருத்தி மட்டுமா அழகா?


என்று அழகிப்போட்டிகள் அவல நிலை பற்றி எழுதும்போதும் இரவியின் சமூகப்பார்வை வெளிப்படுகிறது. எளிமையாக எழுதவேண்டும், எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று நினைத்து எழுதும் ரவியின் கவிதைகள் சில இடங்களில் கவிதை என்ற எல்லையை மீறி உரைநடையாகவே தோன்றுகிறது. இந்த இலக்கிய விபத்தை இரவி தவிர்க்க வேண்டும்.

மின்சார சிக்கனம்
தேவை இக்கணம்
பகலிலும் எரியும் தெருவிளக்கு


போன்ற கவிதைகளை உதாரணமாகச் சொல்லாம். ஆங்கில வார்த்தை கலக்காமலும், இலக்கியப் பகட்டு செய்யாமலும் எழுதப்பட்டதற்காக கவிதை வாசகர்கள் இந்நூலைப் படிக்கலாம்.
நூலின் பெயர் : களவு போன காலங்கள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
 
 

நூலின் ஆசிரியர் : கவிஞர் கு.சிவசுப்பிரமணியன்

நூலின் அட்டைப்படமே வித்தியாசமாக உள்ளது. பாலைவனத்தில் ஒரு அழகிய பெரிய மரம். களவு போன காலங்கள் பாலைவனமாகவும், காலம் களவு போகாமல் இருந்திருந்தால் மரமாக செழித்து இருக்கும் வாழ்க்கை என்று சொல்வது போல் உள்ளது. நூலாசிரியர் கவிஞர் கு.சிவசுப்பிரமணியன் கொஞ்சு தமிழ்க் கோவையின் நற்றமிழ்ப் பாவலர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதிக் கட்டுப்பாடு அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் இலக்கிய பணியிலிருந்து ஓய்வு பெறாமல் உழைத்து வரும் உழைப்பாளி. எழுந்திரு பாப்பா இவரின் முதல் படைப்பு. இந்நூல் இரண்டாவது படைப்பு. ஒவியா பதிப்பகத்தின் தரமான வெளியீடாக வந்துள்ளது.

மரபு அறிந்து மரபு மீறு என்பார்கள். நூலாசிரியருக்கு மரபும் வருகின்றது. புதுக்கவிதையும் வருகின்றது. மரபை ரசித்துப் படித்தவர்கள் புதுக்கவிதையை எளிதில் ஏற்பதில்லை. மரபுக் கவி விரும்பிகளுக்கு விருந்தாக உள்ளது நூல். அரிமா டாக்டர் பூவண்ணன் அணிந்துரை, கவிஞர் வதிலை பிரபாவின் வாழ்த்துரை முத்தாய்ப்பாக உள்ளது. வருடம் தோறும் அற்புதமாக தொகுப்பு நூல் வெளியிட்டு தமிழன்னைக்கு அணிகலன் பூட்டும் கோவை வசந்தவாசல் கவி மன்றத்தைச் சேர்ந்தவர் நூல் ஆசிரியர் என்பது கூடுதல் சிறப்பு. "தாயே தமிழே" என்ற தொடங்கி திருக்குறளின் முப்பால் போல மூன்று பகுதியாக பிரித்து 66 கவிதைகளின் அணிவகுப்பு அழகான சொற்களின் சுரங்கமாக உள்ளது.

தாயே தமிழே

உலகின் மூத்த உயர் தனிச்செம்மொழி
மலையென உயர்ந்து கடலென விரிந்து
வானெனப் பரந்த வண்டமிழ்த் தாயே!
தேனமு தாகும் தொண்மொழித் திருவே!


உலகின் முதல் மனிதனான தமிழன் பேசிய தமிழ் மொழியின் சிறப்பை நன்கு விளக்குகிறார்.

கதிரவன்,நிலவு,காற்று,பனித்துளி,மலையருவி, மலர் இப்படி இயற்கையை கவிஞர் மிகவும் ரசித்து,ருசித்துப் பாடி உள்ளார். இயந்திரமயமாகி விட்ட இன்றைய உலகில் மனிதனே இயந்திரமாக மாறி வரும் சூழலில் இயற்கையை ரசிக்க மனமும், நேரமும் இருப்பதில்லை. குறைந்தபட்சம் இதுபோன்ற நூலகளின் வாசிப்பின் மூலமாகவாவது இயற்கையை ரசிக்கலாம். பதச்சோறாக கவிதை.

மலையருவி

தூய நன் வெண்மைப்படலம்
துளிர்ந்திடும் தண்ணீர்த் திவலை
வேய்ங்குழல் மூங்கில் பட்டு
விதவித இசை பரப்பி
காய்ந்திடும் பாறை மோதி
கடுமொள காவிற் பரப்பி
பாய்ந்திடும் தெண்ணீர் வெள்ளப்
பனித்திரள் அழகே அருவி


கவிஞர் அருவியை கண்டுகளித்து கவிதையாக்கி இருக்கிறார். வாசகர்களும் இது போன்ற கவிதை நூல்களை வாங்கிப் படித்தால் கவிதை பற்றிய புரிதலும் புதிய சொற்களும் விளங்கும். வாசகர்கள் புகழ்பெற்ற கவிஞர்கள் கவிதையை மட்டுமே படிப்பதால் புத்தகக் கடைகளில் வளரும் கவிஞர்களின் படைப்பை வாங்கி வைக்கவே யோசிக்கின்றனர். வாசகர்களும் வளரும் கவிஞர்களை ஆதரிக்க முன்வர வேண்டும்.

தொடக்கம்

அன்னை வயிற்றில் அன்பின் வடிவாய்
அடைபடு குழந்தைச் செல்வம்
தன்னை விடுத்துத் தாரண காணும்
பிறப்பது வாழ்வின் தொடக்கம்
உருவெழில் பெற்று ஒவியம் நிகர்ந்த
உவந்திடும் புதுமணப் பாவை
பருவக் கோலம் பெற்றனன் மன்றல்
புகுவதும் வாழ்வின் தொடக்கம்.


இந்தியாவில் 61-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குத்தாட்ட நடிகைகளின் கும்மாளத்தை ஆபாச நடனங்களை தொலைக்காட்சியில் பார்த்து பரவசப்பட்டு பொழுது கழித்தனர். ஆனால் இன்னும் வறுமை ஒழிந்தபாடில்லை. கொத்தடிமைத் தனங்களும் ஒழிந்தபாடில்லை. அதனை உணர்த்தும் அழகிய கவிதை இதோ!

கொத்தடிமை

நித்தம் பணியாற்றி
நீங்காத வறுமையினால்
கொத்தடிமை ஆனார்
குடும்பத்தை அடகு வைத்து
மாடாக உழைத்தார்
மனைவாழ்வில் நலங்கணார்
பாடுமிகப் பட்டும்
பயன்துய்க்க வழி காணார்


இந்தியாவில் இன்னும் முழுமையாக கொத்தடிமை ஒழிக்கப்படவில்லை என்பதை உணர்த்திடும் கவிதை

தெய்வத் தமிழ்

அமுதூறும் பாக்களினால்
அற்புதங்கள் பலகாட்டி
தமிழால் இறையோனைத்
துதிபாடி உயர்ந்தனரே
மீண்டும் கோவில்களில்
மடைதிறந்த வெள்ளமென
ஆண்டவன் புகழ்பாட
அருந்தமிழில் பாடுவமே


எல்லாம் அறிந்த கடவுளுக்கு உலகின் முதன்மொழி தமிழ்மொழி எனது தாய்மொழி புரியாதா? புரியாது என்றால், என் மொழி புரியாத கடவுள் எனக்கு எதற்கு? என்று ஒரு பாமரன் சொன்னான். ஆதுபோல தமிழ்நாட்டில் தமிழர்களின் காணிக்கைகளால் நடக்கும் திருக்கோயில்களில் தமிழிலேயே அர்ச்சனைகள் நடைபெற வேண்டும். தமிழிலும் அர்ச்சணை செய்யப்படும் என்பது மாறி, தமிழில் மட்டுமே அர்ச்சனை நடக்கும் என்ற நிலை வர வேண்டும் என்ற ஆவல் கவிஞருக்கு இருப்பது கவிதைகளில் புலப்படுகின்றது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலை வர வேண்டும். உயர் நீதிமன்றங்களிலும் தமிழ் இடம் பெற வேண்டும்.

கடலும் வானும் என்ற தலைப்பில் கவிதை நாடகம் நூலில் உள்ளது. நல்ல நடை தெளிந்த நீரோடை போன்ற கவிதைக்கு விளக்கவுரை தேவையின்றி எளிமையாக எல்லோருக்கும் புரியும் விதத்தில் கவிதை படைத்த கவிஞர் கு.சிவசுப்பிரமணியன் பாராட்டுக்குரியவர். தொடர்ந்து பல நூல்களை எழுதி சாதனை படைக்க வாழ்த்துக்கள்.
www.kavimalar.com


 

 

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment