[அன்புடன்] நூலின் பெயர் : கவிச்சிதறல்,நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
நூலின் பெயர் : கவிச்சிதறல்,நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி |
தொகுப்பாசிரியர் : கவிஞர் ஏகலைவன் மாற்றுத்திறன் படைப்பாளிகளின் கவிதைகள் தொகுப்பு அனேகமாக இது தான் முதல் முயற்சியாக இருக்குமென்று கருதுகின்றேன். இந்நூலின் தொகுப்பாசிரியர் கவிஞர் ஏகலைவன் இரயில் விபத்தில் கால் ஒன்று இழந்த போதும், தன்னம்பிக்கையை மட்டும் என்றும் இழக்காதவர். நான்கு சுவருக்குள் முடங்கி விடாமல், மாற்றுத்திறன் படைப்பாளிகள் இனம் கண்டு, கவிதைகளைப் பெற்று, சிறந்த நூலாக தொகுத்து உள்ளார். இந்த நூலை மிகப் பொருத்தமான மனிதருக்கு காணிக்கையாக்கி இருப்பது மிகச் சிறப்பு. சமர்ப்பணம் உடலின் அவயங்கள் இழந்தாலும், மனத்திண்மை துணையோடு கர்நாடக இசை உலகின் உச்சம் தொட்டு நான் கடவுளென வாழும் கலைமாமணிஎஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்களுக்கு என்று எழுதி உள்ளார். இடுப்புக்குக் கீழ் எதுவுமில்லாத மனிதனின் நடிப்பு. நான் கடவுள் திரைப்படத்திற்கு இயக்குனர் பாலாவிற்கு தேசிய விருது கிடைக்கக் காரணமாக இருந்தவர். மாற்றுத்திறன் படைத்தோர் அனைவரும் இவரை முன் உதாரணமாகக் கொண்டு முன் வர வேண்டும். இந்நூலில் கவிஞர் கோவை ஞானி தொடங்கி, கவிஞர் ஏகலைவன் வரை 44 மாற்றுத்திறனாளர்களான கவிஞர்களின் கவிதைகளும் அவர்களைப்பற்றி சிறு குறிப்பும் உள்ளது. இந்தத் தொகுப்பு நூலைப்படிக்கும் வாசகர்களின் உள்ளத்தில் தன்னம்பிக்கை விதை விதைக்கப்படுகிறது. மாற்றுத்திறன் படைத்தோரின் கவிதைத்திறனை பறைசாற்றும் விதமாக நூலை தொகுத்து உள்ள கவிஞர் ஏகலைவன் பாராட்டுக்குரியவர். அன்று துரோணாச்சாரியார், ஏகலைவனிடம் குரு தட்சணையாக கட்டை விரலைக் கேட்டார் என்று இதிகாச கதை கொண்டது. ஒரு கால் இழந்ததை, இழப்பாகக் கருதாமல் தொடங்கி இயங்கிக் கொண்டே இருக்கும் உழைப்பாளி. மாற்றுத் திறன் படைத்தோரின் திறமையை உலகிற்கு உணர்த்த வேண்டுமென்ற உன்னத நோக்கத்துடன் தொகுத்து உள்ளார். இந்த தொகுப்பில் மற்ற படைப்பாளிக்கு இடம் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறி விட்டார். இந்நூலில் தமிழ் மூதறிஞர் தமிழண்ணல் வாழ்த்துரை, திருநெல்வேலி வானொலி நிலைய உதவி இயக்குனர் திரு.கோ. சோமாஸ் காந்தமூர்த்தி வாழ்த்துரை, வித்தகக் கவிஞர் பா.விஜய் அணிந்துரை என நூலிற்கு கம்பீரமாக உள்ளது. முயற்சி ஒன்று மட்டும் தான் இயலாமையை இல்லாமலாக்குகின்றது இப்படி கல்வெட்டு வார்த்தைகளால் நூலிற்கு அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ளார் வித்தகக் கவிஞர் பா.விஜய். கவிஞர் கோவை ஞானியின் கவிதை கனவு வாழ்க்கை போதுமெனக்கு கண்பார்வையிழந்து கடந்தன இருபது ஆண்டுகள் என்றாலும், என் பாட்டியை ஒரு நாள் இரவு பார்த்தேன் எனக்குள் உயிர்ப்பாய் இன்றும் அவர்கள் கனவுக்காட்சிகள் போதும் எனக்கு கவிஞர் சு.அழுதசாந்தியின் வார்த்தை இலைககள் உதிர்ந்து விட்டன என மரங்கள் சோர்ந்து விடவில்லை அவைகளுக்குத் தெரியும் வசந்த காலம் உண்டு என மனதில் வலியை உணரச் செய்த நிஜங்கள் அனைத்தும் நெருப்பாய் இருந்தும் சுடவில்லை ஏனெனில் நம்பிக்கை நாதம் நம்முள் இசைப்பதால் இயற்கைச் சொல்லி தன்னம்பிக்கை விதைக்கும் நயமான வரிகள் கவிஞர் இரா.சுமதியின் கவிதை நம்மை சிந்திக்க வைக்கின்றன.திருநங்கைகளின் உள்ளக்குமுறலை பதிவு செய்துள்ளார். திருநங்கை ஆண்பாலிலும் அகப்படவில்லை பெண்பாலிலும் பொருத்தமில்லை அரவாணி என ஆகி விட்டதால் அரவணைக்கக் கூட யாருமில்லை நாங்கள் மட்டும் அடையாளம் காணாத ஆச்சர்யக்குறியானோம். மாற்றுத்திறன் படைப்பாளிகளில் பல்வேறு பொருள்களில் பாடி உள்ளனர். காந்தியடிகள் பற்றி,கல்வி பற்றி, மனைவி பற்றி மாற்றுத்திறனாளர்களின் உள்ளத்து உணர்வுகளின் வெளிப்பாடு கவிதைகளாக மலர்ந்து உள்ளது. கவிஞர் இரா.பாக்கியராஜ் கவிதை சழுதாயத்தின் கன்னத்தில் அறைவது போல உள்ளது. சோகம் அக்கா பெற்றாள் பெண் குழந்தை அப்பா இறந்த போது கூட வீட்டில் இத்தனை பெரிய சோகமில்லை கவிஞர் தங்கராஜீ கவிதை பட்டுப்பூச்சி ஆயிரக்கணக்கான பட்டுப்பூச்சிகளின் உயிர் உன் புதிய பட்டுப்புடவையில் இக்கவிதையை படித்ததும் என் நினைவிற்கு வந்தது ஒரு கருத்து, உணவில் சைவம் கடைபிடிக்கும் பெண்கள் இனி ஆடையிலும் சைவம் கடைபிடித்தால் பட்டாம்பூச்சிகள் உயிர் வாழும் கவிஞர் சித்தை பா. பார்த்திபன் ஹைக்கூ விடாத அடைமழை நனையாமல் ஊர் சுற்றும் நிறைவில்லா மனம் ஒற்றைக் கால் தவம் அரிதாய் பிடிபடும் சரியான ஹைக்கூ கவிஞர் சின்னப்பா கணேசன் கவிதை நொண்டி நான் நல்ல மாணவன் சான்றளித்தது ஆசிரியர் இனம் நல்ல நண்பன் புகழ்ந்தது நண்பர் வட்டம் பெருமைக்குரியன் பெருமைப்பட்டது என் உறவுகள் இத்தனை இருந்தும் நொண்டி என்றே அழைக்கிறது மானிட இனம் குருடன் என்ற சொல்லை பயன்படுத்துவதை விடுத்து பார்வையற்றோர் என்ற சொல்லை பயன்படுத்த அனைவரும் முன்வர வேண்டும். மாற்றுத்திறன் படைத்தோரின் உள்ளத்தை காயப்படுத்தும் இதுபோன்ற சொற்களை பயன்படுத்தாமல் இருப்பதே நாம் அவர்களுக்கு செய்யும் பெரிய உதவியாக இருக்கும். அவர்கள் மனம் புண்படும் சொற்களைப் பயன்படுத்தாமல் மென்மையாகப் பேசி மாற்றுத்திறன் படைத்தோரின் திறமைகளை இனம் கண்டு, ஊக்கப்படுத்தி வாழ்வில் வளம் பெற உதவ வேண்டும். இப்படி பல்வேறு கருத்துக்களை விதைத்தது இந்நூல். மனிதநேயம் பறைசாற்றும் அற்புத நூல், பாரட்டுக்கள், வாழ்த்துக்கள். |
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment