[அன்புடன்] ஊடகவியலாளர்களும் - மனித உரிமைகளும் - எம்.ஜெ.பிரபாகர்
ஊடகவியலாளர்களும் - மனித உரிமைகளும் - எம்.ஜெ.பிரபாகர் |
மனிதர்களாகப் பிறந்த மனிதர்களின் அடிப்படையான – விட்டுக்கொடுக்க இயலாத – மறுக்க முடியாத சில உரிமைகளை நாம் மனித உரிமைகள் என அழைக்கிறோம். சாதி, மதம், பால், இனம், நாட்டுரிமை ஆகியவற்றிற்கு அப்பால், ஒவ்வொரு தனி மனிதருக்கும் பொதிந்திருக்கக் கூடிய பிறப்புரிமைகளை மனிதனின் சுதந்திரத்திற்கு, கண்ணியத்திற்கும், நலன்களுக்கும் அவசியமான உரிமைகளை மனித உரிமைகள் என்கிறோம். 1993-இல் வியன்னாவில் நடந்த மனித உரிமைகள் குறித்த மாநாட்டின் பிரகடனத்தில் "மனிதனின் மதிப்பிலிருந்தும் கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்" என்று குறிப்பிடப்பட்டது. மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல. அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப் பட்டதுமல்ல.எனவே, மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் ஆகும்.இந்தியாவில் 1993 – ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ல் குடியரசு தலைவரால் மனித உரிமைகளைப் பாதுகாக்க அவசரச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது.இந்த அவசரச் சட்டத்திற்கு மாற்றாக மனித உரிமைகள் பாதுகாக்க அவசரச்சட்டத்திற்கு மாற்றாக மனித உரிமைகள் பாதுகாப்பு சட்ட வரைவு 1993 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய நாடளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டு இந்திய குடியரசு தலைவரின் ஒப்புதலை 1994 – ஆம் ஆண்டு சனவரி மாதம் 8-ம் நாள் பெற்றது தான் மனித உரிமைச் சட்டம். இந்திய நாட்டிற்குள் கடந்த இருபது ஆண்டுகளில் தான் "மனித உரிமை" என்ற கருத்தியல் தீவிரம் பெற்றது. அடித்தட்டு மக்களின் உழைப்பு சுரண்டலிலிருந்து மேல்தட்டு மக்களின் பல்வேறு பிரச்சனைகளையும் வெளிக் கொணருவதில் மனித உரிமை அமைப்புகள் ஆற்றுகின்ற பங்கு போற்றுதலுக்குரியதாகும். முழமையான மக்களாட்சி பண்புடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு அரசின் பொறுப்புற்குரிய நண்பனாய், தவறுகளைச் சுட்டிக் காட்டும் நேர்மையான தோழனாய் திகழ்பவை ஊடகங்கள். அதனால் தான் ஊடகங்கள் அரசியல், நீதி, நிருவாகத்திற்கு அடுத்த படியாக சனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதி போற்றப்படுகிறது. அரசுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக இருந்து இவ்விரண்டு சக்திகளையும் கூர்மைப்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு மகத்தானது. ஆட்சியாளர்கள் தங்களது பொறுப்பிலிருந்து விலகும்போது சமூகநோக்குடன் புரியவைத்து மக்கள் மத்தியில் விவாதத்திற்கு வைப்பதற்கு பொறுப்புள்ள ஊடகங்கள் எதுவும் தயங்குவதில்லை. வன்முறை தலைவிரித்தாடும் இன்றைய சூழலில் தனது எழுத்தாயுத்தால் அதனைச் சீர் செய்ய நினைக்கும் ஒவ்வொரு ஊடகவியலாளனும் அமைதியான வாழ்வியல் சூழலைக் கட்டமைக்க முயலும் மனித உரிமைப் போராளியாய் இச்சமூகத்தில் வாழ்ந்து வருகிறான். மக்களின் அடிப்படை உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் ஊடகவியலாளர்கள் தங்களின் உறவுகளைத் துறந்து விட்டுத் துறவியைப்போன்றே வாழ்ந்து வருகின்றனர். ஆதிக்கவாதிகள், அதிகாரம் தலைக்கேறியவர்கள் அரசாட்சி செய்யும் நாடுகளில் அவர்தம் அச்சுறுத்தல்கள், கொலை மிரட்டல்கள் உள்ளிட்ட கொடுஞ்செயல்களுக்கு இடையில் உயிரை இழக்கின்ற விளிம்பு நிலை வாழ்க்கை ஊடகங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கே உரித்தானதாகும். இந்தியா போன்ற மிகப்பெரிய சனநாயக நாடுகளில் அரசியல்வாதிகளால் ஊடகவியலாளர்கள் சித்தரவதைக்கு உள்ளாக்கப்படுவது அன்றாட நிகழ்வுகளாக ஆகியுள்ளது. அரசு, அதிகாரவர்க்கம் செய்கின்ற தவறுகளை மக்கள் மன்றத்தில் தெரியப்படுத்தம் அனைத்து ஊடகவியலாளர்களும் ஏதாவது ஒரு வகையில் மிரட்டலுக்கு உள்ளாகிறார்கள். அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். உலக அளவில் கடந்த 2005-2006 ஆண்டுகளில் மட்டும் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் 1678 பேர் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்கள் 2780 பேர். கடத்தப்பட்டவர்கள் 56 பேர். 168 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2007 ஆண்டுகளில் 176 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2008 ஆண்டில் 109 க்கும் அதிகமான ஊடகவியலாளர்களும் ஊடகம் தொடர்பாக அலுவலகங்களில் ஈடுபட்டுள்ளவர்களும் கொல்லப்படுவதில் முதல் ஐந்து இடங்களைப் பெற்றுள்ள நாடுகளில் நம் நாடும் ஒன்றாகும். ஈராக், சோமாலியா,இந்தியா,ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ் என வரிசைப்படுத்தியுள்ளது. உலக செய்தியாளர் பாதுகாப்பு நிறுவனம் இப்பட்டியலில் சீனா துருக்கி செய்தி, அமெரிக்கா, இலங்கை, பிரேசில், கானா, இரசியா,இந்தோனேசியா, பெரு,பாகிஸ்தான், வங்காளதேசம், ஜிம்பாவே, மெசிக்கோ, குவாதிமலை, கேமரூன், பாலஸ்தீனம், நைஜிரியா போன்ற நாடுகளிலும் இணைந்துள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பெரும்பான்மையானவர்கள் உள்ளுர் தகவல் சேகரிப்பின் போது தங்களது உயிரை இழந்தவர்கள். ஊடகவியலாளர்கள் கொலை தொடர்பான வழக்குகளில் பெரும்பாலான கொலையாளி அடையாளம் காணப்படுவதில்லை. அடையாளம் கண்டறியப்பட்டால் எளிதில் தண்டனை பெற்றுவிட முடியாது.இச்சூழலைப் பார்க்கும் போது ஊடகவியலாளர்களின் பணிச்சூழல் மிகவும் ஆபத்து நிறைந்தது என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும். நமக்கு அண்டை நாடான இலங்கையில் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு அடையாளம் தெரியாதவர்களால் கொல்லப்பட்ட சம்பவங்கள். 34 ஊடகவியலாளர்கள் 10 பேர் கடத்தப்பட்டுள்ளனர். 50 ஊடகவியலாளர்கள் தலை மறைவாகியுள்ளனர். கடந்த 10 மாதங்களில் 15 ஊடகவியலாளர்கள் இலங்கையில் கொல்லப்பட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை ஊடகவியலாளர்கள் திசைநாயகம் சர்வதேச விருது பெற்றவர். விடுதலைப்புள்ளிகளுக்கு ஆதரவாக கட்டுரை எழுதியதாகக் கருதி மனித உரிமைகளுக்கு எதிரான பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இப்போது இலங்கை உச்சநீதிமன்றம் திசைநாயகத்திற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது. இலங்கை ஊடகவியலாளர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் இலங்கையில் கொல்லப்பட்டுள்ளனர். இது போன்ற சூழலில் ஊடகவியலாளர்கள் சமூகம், உலக அளவில் இப்போது கடும் நெருக்கடியைளச் சந்தித்துக் கொண்டுள்ளதை நாம் அறிய முடியும். இந்தியாவைப் பொறுத்த அளவில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. இதுபோன்றே கொல்லப்படும் நிகழ்வுகளும் அதிகரித்துக் கொண்டே உள்ளன. இச்சம்பவங்கள் அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளவர்கள் அரசியல்வாதிகள். மதுரையில் பத்திரிக்கை அலுவலகம் எரிக்கப்பட்டு மூன்று ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டது வரலாறு. சென்னையில் நீதிமன்ற வளாகத்தில் காவல்துறை நிகழ்த்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைப் படம்பிடித்த ஊடகவியலாளர்கள் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டனர். மிரட்டப்பட்டனர். அண்மையில் கிருட்டினகிரியில் நடைபெற்ற இராகுல்காந்தி நிகழ்ச்சிக்குச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர். தவறான செய்தி வெளியிட்டதாகக் கூறி ஊடகவியலாளரை பத்திரிக்கை அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்து கைது செய்த சம்பவமும் நாம் அறிவோம். ஆள், அதிகாரம்,பணபலம், கொண்ட சூழலில் உள்ள அரசியல்வாதிகளால் ஊடகவியலாளர்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.ஊடகவியலாளர்கள் பாதுகாப்பற்ற சூழலில் தங்களது பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர் என்பது உண்மை. அரசு, ஆட்சியாளர்கள் குறித்த உண்மைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ள உதவி செய்யும் கடமை ஊடகங்களுக்கு உண்டு என வேதான் ஊடகம் சனநாயகத்தின் நான்காவது தூண் என அழைக்கப்படுகிறது. உலககளாவிய மனித உரிமைப் பிரகடனம் இந்திய அரசியல் சட்டம் ஆகியவற்றின் 1928 பிரிவுகள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை வழங்குகின்றன.இவை வெறும் தனி ஆளின் பேச்சுரிமை சார்ந்தது மட்டுமல்ல பத்திரிக்கைக்கான சுதந்திரத்தையும் சார்ந்தது. ஊடகவியலாளர்களின் உயிருக்கு எந்த விலை வந்தாலும், வன் செயல்கள் நாட்டின் எந்த இடத்தில் நடந்தாலும் அங்கு சென்று உண்மையை வெளிக்கொணர்ந்து வரும் ஊடகவியலாளர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது. ஓரு சமூகத்தின் மனச்சான்று நல்லாட்சியின் அடிக்கட்டுமானம். சனநாயகத்தின் காவலர்கள் என்று வாழ்கின்ற ஊடகவியலாளர்களை எதிரிகளாகப் பார்க்கின்ற அரசியல் வாதிகளும், அதிகார வர்க்கத்தினரும் ஒருபோதும் நிலைத்து நின்றதாய் வரலாறு இல்லை. எனவே, சட்டங்களும் பிரகடனங்களும், உடன்படிக்கைகளும், தீர்மானங்களும்,தீர்ப்புகளும், தாள்களில் அச்சிடப்பட்ட வெறும் எழுத்துக்களாக இல்லாமல் அவை சரியாகக் கடைபிடிக்கப்படுவதன் மூலமே உயிர்பெறும். ஊடகவியலாளர்களின் உயிர் பாதுகாப்பிற்கு உரிய ஏற்பாடுகளை அரசும், மனித உரிமை அமைப்புகளும் மேற்க்கொள்ள வேண்டும். (கட்டுரையாளர் : மக்கள் தொடர்பு அலுவலகர், மக்கள் கண்காணிப்பகம் மதுரை thagaval era.eravi editor www.kavimalar.com |
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment